நீதிக்கு முன் முன்னாள் பிரதமர்கள்: சட்டத்தின் வலிமை புலப்படுகிறது

இராகவன் கருப்பையா – கடந்த வாரத்தில் 3 முன்னாள் பிரதமர்களும் ஒரு முன்னாள் அமைச்சரும் ஒரு சேர நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது அனேகமாக உலக வரலாற்றில் முதல் முறையாக நடந்திருக்கக் கூடும்.

இவ்விவகாரம் நமது சட்டத்தின் வலிமையை புலப்படுத்துகிறது. சட்டத்தின் முன் எல்லாருமே சரிசமம்தான் என்பதையும் மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது. இவை ஒருபுறமிருக்க ஊழல்களினால் நம் நாடு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டும் காட்டுகிறது.

கடந்த காலங்களில் உலகளாவிய நிலையில் முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலவேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் நம் நாட்டில் இவர்கள் அனைவரும் ஒருசேர நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது முன்னுதாரணம் இல்லாத ஒரு அதிசயத்தைப் போல் தெரிகிறது. நாட்டின் நீதித்துறையில் திடீரென ஒரு பரபரப்பான சூழலையும் இவ்விவகாரம் முடுக்கிவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்களான நஜிப், முஹிடின் மற்றும் சப்ரி, ஆகியோரோடு, ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன், ஆகியோரே ஒருசேர குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நால்வருமாவர்.

நஜிப் ஏறத்தாழ 9 ஆண்டு காலம் பிரதமராக இருந்த வேளையில், முஹிடின் சுமார் 17 மாதங்களும் சப்ரி கிட்டதட்ட 13 மாதங்களும் மட்டுமே அப்பொறுப்பை வகித்தார்கள். முஹிடின் அரசாங்கத்திலும் சப்ரி ஆட்சியிலும் சரவணன் சிறிது காலம் மனிதவள அமைச்சராக இருந்தார்.நஜிப் ஏற்கெனவே வேறு குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே. இதர மூவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதேத் தவிர இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

அரசியல்வாதிகள் பொருளாதார ரீதியில் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு எந்த அளவுக்கு தரம்தாழ்ந்து குறுக்குவழிகளைக் கையாளுகிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் அண்மைய காலமாக நம் நாட்டில் நிறைய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

துளியளவும் சங்கோஜமில்லாமல் மக்கள் பணத்தை சர்வசாதாரணமாக பிரித்து மேய்வது பல அரசியல்வாதிகளுக்கு அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்டது.

பொது மக்கள், குறிப்பாக கல்விமான்கள், தேர்மையானவர்கள், உண்மையாக உழைப்பவர்கள், முறையாக வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமின்றி மாணவர்களும், அரசாங்கத்தின் பொருளாதார நீரோட்டத்தில் பயன்பெற இயலாமல் வறுமையில் வாடும் அடிதட்டு மக்களும் கூட இத்தகைய அட்டூழியங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தகையோரின் பார்வையில் எம்மாதிரியான மரியாதையை இந்த தரம்தாழ்ந்த அரசியல்வாதிகள் எதிர்பார்க்க முடியும்? இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?

“நான் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்படுகிறேன். என் அரசியல் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள்,” போன்ற வசனங்கள் எல்லாம் கடந்த காலங்களில் நாம் கேட்டுக் கேட்டுக் புளித்துப் போன ஒன்றுதான். அதில் உண்மை இல்லை என்று நாம் சொல்லிவிடவும் முடியாது. பிரதமர் அன்வாரும் கூட ஒரு காலக்கட்டத்தில் அத்தகையச் சூழலில் சிக்கியிருந்தது நமக்குத் தெரியும்.

Concept struggle against corruption, illegal payment, lot cash, currency bribe in hand, design cartoon style vector illustration. large denomination banknote, man businessman says stop bribery.

நம் நாட்டு அரசியல் தலைவர்கள் இப்படி வரிசை பிடித்து நீதிமன்ற வாசலை மிதிக்கும் போது ஆதரவாளர்களையும் ஊடகத்தாரையும் நோக்கி கையசைத்து புன்னகைப்பதைப் பார்க்கப் போனால், “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,” என தமிழ் திரையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உதிர்த்த வசனங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

மலேசியாவில் ஊழல் எனும் புற்றுநோய் ஆழமாக வேரூன்றி நாட்டின் எதிர்காலத்தை அரிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஊழல் நாம் கட்டுபடுத்தவும், அதை கையாளும் விதம் சிங்கப்பூர் போன்ற நாட்டின் செயலாக்கம் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.

நாட்டின் 69ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நமக்கு ஊழலிலிருந்து எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியாத சூழல் மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடிய ஒன்று. அதை மாற்ற வேண்டும்.