நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார்.
பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீதர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த “குறத்தி மகன்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், அவர் மாஸ்டர் ஸ்ரீதர் என அழைக்கப்பட்டார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அவர், மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. மாஸ்டர் ஸ்ரீதருக்கு இந்திரா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
சென்னை, கொட்டிவாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, குட்டி பத்மினி உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.