‘சென்னையில் 20-ம் திகதி மீனவர் சந்திப்பு நடப்பது சாத்தியமில்லை’- இலங்கை

rajitha_senarathneதமிழக-இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வரும் 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அந்தக் கூட்டம் சாத்தியப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 179 பேரை விடுதலை செய்யவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னைப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இருதரப்பிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக இலங்கை அரசும் இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 275 பேரையும் ஓரிரு நாட்களில் விடுவிக்கும் என்றும் ஜெயலலிதா சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தமிழகத்தில் மட்டுமன்றி ஆந்திராவிலும் 34 இலங்கை மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அமைச்சர், ‘எல்லா இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை அரசு இன்னும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சேனாரத்ன உறுதிப்படுத்தினார்.

தலைநகர் தில்லியில் எதிர்வரும் 15-ம் திகதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் செல்லவுள்ள இலங்கை அமைச்சர், அங்கு தமிழக மீனவர் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

ஜெயலலிதா மீது காட்டம்

 

‘மத்திய அரசு தமிழக மீனவர் பிரச்சனையில் அலட்சியப் போக்குடன் செயற்படுகிறது’- ஜெ.

 

‘தில்லியில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் நாங்கள் பேசப்போகின்ற விடயங்கள் பற்றிய ஆவணங்களை இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் அனுப்பிவைத்திருக்கிறோம்’ என்றார் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன.

‘இந்த மீனவர்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு முக்கிய தடையாக இருப்பவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்’ என்றும் இலங்கை அமைச்சர் மீண்டும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சென்னையில் 20-ம் திகதி இருதரப்பு மீனவர் சந்திப்பு நடப்பதா இன்னும் அதிகாரபூர்வமாக இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகள் மூலமாகவே அந்தச் செய்தியை தெரிந்துகொண்டிருப்பதாகவும் அமைச்சர் சேனாரத்ன தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான தங்கள் தரப்பு பிரதிநிதிகள் இன்னும் தயார்படுத்தப்படவில்லை என்றும் எதிர்வரும் 15-ம் திகதி தில்லி உயர்மட்ட சந்திப்பின் பின்னரே அதுபற்றி தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தமிழோசையிடம் கூறினார்.

‘எங்களுக்கு அறிவித்துவிட்டுத் தான் இலங்கைப் பிரதிநிதிகள் சென்னைப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள முடியும் என்று எமது வெளியுறவு அமைச்சும் எங்களுக்கு அறிவித்துள்ளது’ என்றும் கூறினார் அமைச்சர்.

இதேவேளை, பிரதமரால் தனக்கு எழுதப்பட்ட பல கடிதங்கள் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன என்றும் அந்தக் கடிதங்களில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிட்டது என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: