“பைத்தியக்கார முதல்வர்’ கேஜரிவால்: சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு

susilkuar_shinde_001தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் “பைத்தியம்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கடுமையாக சாடியுள்ளார்.

தில்லி போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தொடங்கிய தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது. முதல்வரே போராட்டத்தில் ஈடுபட்டதற்கு காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுஷில்குமார் ஷிண்டே பேசியதாவது:

மும்பை பாந்திராவில் உள்ள கேர்வாடி காவல்நிலையத்தில் 1970ஆம் ஆண்டுகளில் நான் பணியாற்றியபோது, சிவ சேனை அமைப்பினர் நடத்திய கலவரத்தின் காரணமாக எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை.

இதேபோன்று தற்போது தில்லியில் நடைபெற்றுள்ளது. பைத்தியக்கார முதல்வர் தர்னாவில் அமர்ந்த காரணத்தால் போலீஸாருக்கு வழங்கிய விடுமுறை ரத்து செய்யப்பட்டது என்று ஷிண்டே கூறினார்.

பாஜக தாக்கு: இதனிடையே,

கேஜரிவால் நடத்திய தர்னா போராட்டம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில், “தவறு செய்ததாக கூறப்படும் போலீஸாரை பணி மாற்றம் செய்யாததற்கு ஒரு தர்னா தேவையா? பொறுப்பில்லா நிர்வாகத்தையும், குழப்பமான அரசையும் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அளித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியோ ஸ்திரமான அரசை வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளது. இந்த விவகாரங்கள், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்’ என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.

TAGS: