மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல்தான் பிரதமர்

pchidambaramமத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் பதவியை ஏற்பார் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற ப. சிதம்பரம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவியேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்தார்.

அதையடுத்து, அடுத்த நாளே பிரதமர் பதவிக்கு வேறு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே நடைமுறை வரும் மக்களவைத் தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்று கூற முடியாது.

அரசியலில் முடியாதது என்பது எதுவும் கிடையாது. மத்தியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் என்னைப் பொருத்தவரை ராகுல் காந்தியே பிரதமர் பதவியை ஏற்பார். அதற்கான திறமை அவரிடம் உள்ளது.

மோடி மீது தாக்கு: பாஜகவுக்கு சில பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று நரேந்திர மோடி கூறுகிறார்.

ஆனால், அவர் முதல்வராக உள்ள குஜராத் மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி சார்பாக முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இல்லை. அக்கட்சியின் கொள்கைகள் இந்தியாவை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஆம் ஆத்மிக்கு கண்டனம்: முன்னதாக உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய சிதம்பரம், ஆம் ஆத்மி கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் தாக்கி பேசினார்.

“இந்தியாவில் கட்சி அடிப்படையிலான ஜனநாயகம்தான் பின்பற்றப்படுகிறது. கும்பலாகக் கூடி ஜனநாயகத்தை நிலைநாட்ட நினைப்பது எடுபடாது’ என்று சிதம்பரம் கூறினார்.

TAGS: