கச்சத்தீவு கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், பாதுகாப்புத் துறை அமைச்சகமுகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், 1983-ஆம் ஆண்டு முதல் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களையும், அதை கடலோரக் காவல்படை தடுப்பதற்கு தவறியதையும், உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்கள் மீன்பிடி எல்லையைத் தாண்டியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய கருத்தை தெளிவாக விவரிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜன.23) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே காலம் காலமாக பயன்படுத்தப்பட்ட கடல் பகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டு கடந்த 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய – இலங்கை மீனவர்கள் அவர்களுடைய பாரம்பரிய உரிமைகளை பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1974-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 6-இன் படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு உரிமையில்லை.
கச்சத்தீவை பார்வையிடுவதற்கும், கச்சத்தீவில் உள்ள செயின்ட் ஆண்டனி கிறித்தவ ஆலயத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாவில் பங்கேற்பதற்கும் மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இலங்கையிடம் பயணம் தொடர்பாக அனுமதி பெற வேண்டியதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் வெளியுறவுத் துறைக்கு இடையேயான 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இரு நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் எதிர் நாட்டு மீனவர்களின் படகு மற்றும் மீனவர்கள் செல்லக் கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவுப் பகுதிக்கு சென்று, வலைகளை உலர வைப்பதற்கும், ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் மட்டுமே மீனவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் மீன் பிடிப்பதற்கு உரிமை உண்டு என்பதாக புரிந்து கொள்ளக் கூடாது.
எனவே, மனுவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
கச்சா தீவை இலங்கையிடம் தாரைவார்த்தது இந்த துரோக இந்தியாதான் .இப்போது இந்தியா தனது கீழ்த்தரமான புத்தியை காட்டிவிட்டது.இதற்கு தீர்வு தனி தமிழ் நாடுதான்.
நம்ம தமிழன்களுக்கு முதுகு எழும்பில்லை. துரோகிகளாகி எவ்வளோ நூற்றாண்டுகளாகிவிட்டது.என்றுதான் திருந்துவான்களோ.
திருவள்ளுவர் நிம்மதியாக தூங்க மாட்டார்.பாரதிக்கு புரியும் நம்ம தமிழன்களைப்பற்றி- பாரதி படாததா
நம்மவர்களில் என் இந்த வேற்றுமை.எல்லாரும் தமிழர்கள்- நல்ல தமிழன் கெட்ட தமிழன் இவ்வளவுதானே?