உத்திரபிரதேசத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய இன்று அவர்களின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.
உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் கடந்த மே மாதம் 27 ம் திகதி திடீரென மாயமானார்கள்.
3 நாட்களுக்கு பின்னர், இருவரும் அதே ஊரில் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதும், இந்த சம்பவத்தில் உள்ளூர் பொலிஸ்காரர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
பின்னர் ஒரு சிறுமி கற்பழிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சிறுமிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மர்மமே நீடித்து வந்தது.
இந்நிலையில் சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவற்கு உத்தரபிரதேச அரசு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து விசாரணையை கையில் எடுத்த சி.பி.ஐ. சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்று சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும், கிராம மக்களிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து விசாரித்துவரும் சி.பி.ஐ. உண்மை நிலவரத்தை அறிய சிறுமிகளின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தது.
இந்நிலையில் இன்று சிறுமிகளின் உடலை சி.பி.ஐ. எடுக்க உள்ளது. சிறுமிகள் கொல்லப்பட்டது தொடர்பாக முன்னதாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உறுதியாக எதையும் நிரூபிக்காததை அடுத்து சி.பி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.