காந்திநகர்: ”மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின், சில செயல்பாடுகளை மேற்கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல், அரசின் சேவைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்,” என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில், பிரதமர் மோடி வல்லவர். பிற எந்த பிரதமர்களை விடவும், தகவல் தொடர்புக்கு மின்னணு கருவிகளை பயன்படுத்துவதில் மோடி முதன்மையானவர்.அந்த வகையில், இப்போது ஒரு படி மேலாக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் மூலம், பெரிய மாநாடு ஒன்றில், முதல் முறையாக பேசி புதுமை நிகழ்த்தியுள்ளார், மோடி.
டில்லியில் இருந்தவாறு, குஜராத்தின் காந்திநகரில் கூடியிருந்த, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், அரசு அதிகாரிகளுடன், டுவிட்டர் சமூக வலைதளத்தில், செய்திகளை தொடர்ந்து அனுப்பி, மோடி தெரிவித்ததாவது:மொபைல் போன் பயன்பாடு பெருகியுள்ளது. அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது. அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள், அழைப்புகளை, மொபைல் போன் மூலம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.மொபைல் போன் மூலம் வரும் விண்ணப்பங்கள், அழைப்புகளுக்கு ஏற்ற வகையில், அரசின் சேவை வழங்கும் துறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தான், ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற, நம் அரசின் கனவு திட்டத்தை செயல்படுத்த முடியும்.இவ்வாறு, மோடிதெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், அவசரமாக, ஜம்மு – காஷ்மீர் சென்றதால், அவர் பங்கேற்கவில்லை.
-http://www.dinamalar.com