ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமுகமான முறையில் தேர்தல் நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என அந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) மூத்த தலைவர் முஃப்தி முகமது சயீது தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு பல்கலைகழகத்தில் உள்ள ஜெனரல் ஜொராவர் சிங் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், சயீதுக்கும், பிடிபி, பாஜக, பிசிசி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அவரது அமைச்சரவை சகாக்கள் 24 பேருக்கும், பதவிப் பிரமாணத்தையும், ரகசியக் காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் என்.என். வோரா செய்து வைத்தார். பதவியேற்றவர்களில் துணை முதல்வர் நிர்மல் குமார் சிங்கும் அடங்குவார். இவர் பாஜகவைச் சேர்ந்தவராவார்.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்புக்கு பிறகு, பிடிபி-பாஜக கூட்டணியின் திட்டம் என்ற 16 பக்க அறிக்கையை செய்தியாளர்களிடம் சயீது வெளியிட்டுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததன் பெருமை, பாகிஸ்தான், பயங்கரவாதிகள், ஹுரியத் அமைப்பையே சேரும். எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் (பாகிஸ்தான்), காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை நிலவ அனுமதித்தனர்.
அவர்கள் ஏதாவது செய்திருந்தால், தேர்தலை அமைதியாக நடத்தியிருக்க முடியாது. தேர்தலைச் சீர்குலைப்பதற்கு, சிறிய அளவிலான நடவடிக்கையே போதும் என்பது உங்களுக்குத் தெரியும். ஜனநாயக நடவடிக்கையான தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் அனுமதித்தனர். இதுதான் நமக்கு நம்பிக்கையைத் தந்தது. இதைப் பிரதமரிடமும் தெரிவித்திருக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் ஊழலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு எனது அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போல, ஊழலை அம்பலப்படுத்துங்கள் என மக்களைக் கோரும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. மாநிலத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது. அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். இதுபோல, மாநிலத்தில் அனைவரும் கல்வியறிவு பெற நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.
என்.சி., காங்கிரஸ் கண்டனம்: இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் சுமுகமாக நடைபெற்றதற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என சயீது தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தக் கருத்துக்கு, தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், சயீது பேச்சு குறித்து பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சயீது அரசு பதவியேற்பு விழாவை, தேசிய மாநாட்டுக் கட்சி புறக்கணித்தது. பதவியேற்பு விழாவை காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகக் கூடும் எனப் பரவலாக பேசப்பட்டு வரும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் சைஃபுதீன் சோஸ் மட்டும் விழாவில் கலந்து கொண்டார்.
ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்தது: ஜம்மு-காஷ்மீரில் பிடிபி, பாஜக கூட்டணி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, 49 நாள்களாக நீடித்த ஆளுநர் ஆட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
தேர்தல் ஆணையமும், ராணுவமுமே காரணம்: பாஜக
காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீதின் கருத்து குறித்து, பாஜக தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவம், தேர்தல் ஆணையம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள், தங்கள் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல விரும்புவதால், அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள்.
அவர்களின் விருப்பங்களை, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு, குறைந்தபட்ச செயல்திட்டத்தின் வாயிலாக நிறைவேற்ற முயற்சி செய்யும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.
-http://www.dinamani.com
அப்ப இந்திய இராணுவத்தின் சேவை சும்மா என்று சொல்ல வருகின்றீரா?.