முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கிறார் மோடி… அல் கொய்தா திடீர் பாய்ச்சல்..!

modi_gandhi_001டெல்லி: உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக முஸ்லீம்களை பிரமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் உலக முஸ்லீம்களின் எதிரி என்றும் அல் கொய்தா திடீரென குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு வீடியோ மூலம் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது அல் கொய்தா அமைப்பு. இதையடுத்து ரா அமைப்பு இந்த வீடியோ செய்தி குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.

அல் கொய்தா அமைப்பு ஒரு வீடியோ செய்தியை, வெளியிட்டுள்ளது. அல் கொய்தா அமைப்பின் இந்திய பிரிவு தலைவரான ஆசிம் உமர் என்பவர் இதில் பேசியுள்ளார். பிரதமர் மோடி பெயரைக் குறிப்பிட்டு அவரை எச்சரிக்கும் வகையில் உமர் பேசியுள்ளார். இந்த வீடியோவை அல் கொய்தா ஆதரவு இணையதளமான அல் சஹாப் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழும் உமர், பிரான்ஸிலிருந்து வங்கதேசத்துக்கு என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது:

மோடி முஸ்லீம்களை மறைமுகமாக குறி வைத்துள்ளார். உலகெங்கும் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ளனர். அந்தப் போர் முடிவில்லாமல் தொடர்கிறது. உலக வங்கி, ஐஎம்எல், சார்லி ஹெப்டு, டுரோன் தாக்குதல்கள் மூலமாக இந்தப் போர் தொடர்கிறது.

பல இந்து மத அமைப்பினர் முஸ்லீம்களைத் தாக்கிப் பேசி வருகிறார்கள். மோடியின் சில பேச்சுக்களைப் பார்க்கும்போது அவர் முஸ்லீ்ம்களை மறைமுகமாக குறி வைத்திருப்பதையே காட்டுகிறது.

உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக முஸ்லீம்களுக்கு எதிரான போரைத் தொடுத்துள்ளார் மோடி.சார்லி ஹெப்டு தாக்குதலை யாரும் மறந்து விடக் கூடாது. பிளாக்கர் அவிஜித் ராய் மரணத்தை மறந்து விடக் கூடாது என்று உமர் கூறியுள்ளார்.

அல் கொய்தா அமைப்பு இந்திய துணைக் கண்டத்தில் தனது செயல்பாடுகளை அறிவித்த பின்னர் பெரிய அளவில் அந்த அமைப்பால் எந்தத் தாக்குதலையும் நடத்த முடியாத நிலையே நிலவுகிறது. இந்த நிலையில் தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற வீடியோவை அது வெளியிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதில் ஒன்றுதான் வங்கதேசத்தில் பிளாக்கர் அவிஜித் ராயை கொன்றதை தனக்கு சாதகமாக்கி வங்கதேசத்து மதவாதிகளை தன்பக்கம் இழுக்க அது முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு போர் தொடுத்து மோதலில் ஈடுபட்டுள்ளது. அவாமி லீக் கட்சி இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பதாக ஜமாத் இ இஸ்லாமி குற்றம் சாட்டியுள்ளது.

இப்பிராந்தியத்தில் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ளும் முயற்சியே இந்த வீடியோ என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய துணைக் கண்டத்தில் தனது கிளையைத் தொடங்கியுள்ளதாக அல் கொய்தா அறிவித்தது. ஆனால் அந்த அமைப்பு எதையும் செய்ய முடியாத நிலையே உள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பினர் இதுகுறித்து விளக்குகையில், தங்களது அமைப்பினர் யாரும் அல் கொய்தாவில் இணையவில்லை என்றும் அவர்கள் ஏமன் போரில் பங்கேற்கச் சென்றுள்ளதாக விளக்கியிருந்தது.

ஏமனில் செய்ததைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் செய்ய அல் கொய்தா நினைக்கிறது. ஆனால் அந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் தெஹரிக் இ தலிபான் அமைப்பும், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பின் கிளையான அல் கொரசானும் கடும் போட்டியாளர்களாக உள்ளனர்.

எனவே இப்படிப்பட்ட நிலையில் தன் பக்கம் அனைவின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக மோடி பெயரை அல் கொய்தா பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் கவனத்தை திருப்பும் வகையில் இப்படி அது செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் இந்திய முஸ்லீம்கள் அல் கொய்தா பக்கமோ அல்லது ஐஎஸ்ஐஎஸ் பக்கமோ திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள், அப்படி யாரும் இதுவரை போகவில்லை என்று இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஐஎஸ் அமைப்பில் சிலர் சேர்ந்தனர்., அதில் பலர் திரும்பி விட்டனர். ஆனால் அல் கொய்தாவில் இதுவரை யாரும் சேர்ந்ததாக தகவல் இல்லை என்றும் அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

http://tamil.oneindia.com

TAGS: