இந்தியத் தலைநகர் டில்லி அருகே இரண்டு குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஃபரிதாபாத் என்ற இடத்தில் உள்ள வீதிகளை மறித்து நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் பலரும் இன்று இணைந்துகொண்டுள்ளனர்.
தலித் குடும்பம் ஒன்றை உயிரோடு எரித்துக் கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.
10 மாதங்களே ஆன ஒரு குழந்தையும் 2 வயதான இன்னொரு குழந்தையும் கொல்லப்பட்ட சம்பவம் நாடாளாவிய ரீதியில் கண்டன அலையை எழுப்பியுள்ளது.
குழுந்தைகளின் பெற்றோரான ஜிதேந்தர் மற்றும் ரேகா ஆகியோர் டில்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள். தாய் ரேகாவின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சாதி வன்முறைகளை ஒழிக்க தொடர்ந்து தீவிரமாக போராடப் போவதாகக் கூறினார்.
ஹரியானா மாநிலத்தில் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய முதல்வர் மனோகர் லால் கட்டார், மாறாக மக்கள் மாட்டிறைச்சி உண்பது குறித்து கவலைப்படுவதாக குற்றம் சாட்டினார்.
‘ஊரைவிட்டு வெளியேறுமாறு எச்சரித்திருந்தனர்’
உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபட்டதாக குழந்தைகளின் தந்தை ஜிதேந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தன்னை ஊரை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய உயர்சாதியை சேர்ந்த கும்பல் ஒன்று, மீறினால் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தான் அந்த ஊரை விட்டு வெளியேற தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டில்லி-ஹரியானா எல்லைப் பகுதியில் உள்ள ஃபரிதாபத் பகுதியில் சம்பவம் நடந்துள்ள சோன்பெத் கிராமத்தில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக வாழ்வதாகவும், அங்கு ஒரு சில தலித் குடும்பங்களும் வசித்து வருவதால் அவ்வப்போது பிரச்சனைகள் நடைபெறுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
ஹரியானா காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உறுதியளித்துள்ளார். -BBC