ஆந்திராவில் வன்முறை: ரயில், 2 காவல் நிலையங்கள், 25 வாகனங்களுக்கு தீ வைப்பு

andhrapradesh-district-mapஹைதராபாத்: ஆந்திராவில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய காபூ சமூகத்தினர் ரயில் ஒன்றுக்கு தீ வைத்தனர். இதில் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இட ஒதுக்கீடு கோரி காபூ சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். அவர்கள் சாலை மறியல் செய்ததுடன் ரயில் மறியலும் செய்தனர். தேசிய நெடுஞ்சாலை 16ல் சாலை மறியல் செய்த அவர்கள் 25 வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.

மேலும் இரண்டு காவல் நிலையங்களுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் அந்த ரயிலின் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின. நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காபூ சமூகத்தினரின் போராட்டம் வன்முறையாக மாறிதில் 15 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டத்தால் நேற்று மதியம் முதல் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான ரயில் போக்குவரத்தும், சென்னை-கொல்கத்தா இடையேயான வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. போராட்டத்தால் 27 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

விசாகப்பட்டினத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துனி என்ற இடத்தில் காபூ சமூகத்தினரின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மதியம் 3 மணி அளவில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு தீ வைத்தனர்.

அவர்கள் துனியில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கும் தீ வைத்தனர். இதில் 5 போலீசார் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் துனி ரயில் நிலையத்தை சூறையாடினர். இதில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேர் காயம் அடைந்தனர். நள்ளிரவில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், காபூ சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆந்திராவில் வசிக்கும் மக்களில் 27 முதல் 30 சதவீதம் வரை உள்ளவர்கள் காபூ சமூகத்தினர். தற்போது பிற சாதியினர் பிரிவில் உள்ள அவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினர் பிரிவில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: