தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், தலித்துகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்களையும் நாம் இனம் கண்டுகொண்டு அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரான பிறகு தெலங்கானாவுக்கு முதன் முறையாக வந்த நரேந்திர மோடி, ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் தலித் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலித்துகள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அண்மையில் நடைபெற்ற தாக்குதல்களை முன்வைத்து, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மோடியின் மாநிலமான குஜராத்தில் ஆமதாபாதிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் உனா நகருக்கு கண்டனப் பேரணியும் நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
முன்னதாக சனிக்கிழமை தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “”பசுக் காப்பாளர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் அனைவரும் சமூக விரோதிகள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் “”பசு மீது கொண்ட பக்தி என்பது வேறு; பசு பாதுகாப்பு வெறி வேறு” என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது: தலித் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். உங்களுக்கு யார் மீதாவது கோபம் இருந்தால் என்னை தாக்குங்கள் அல்லது சுடவிரும்பினால் என்னைச் சுடுங்கள். தலித்துகள் மீதான இந்த விபரீத விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு நாட்டின் ஒற்றுமையே முக்கியமாகும்.
சில நேரங்களில் சில சம்பவங்கள் கவனத்துக்கு வரும்போது அவை நமக்கு தாங்கமுடியாத வலியைத் தருகின்றன. தலித்துகள் நீண்ட காலமாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதும், மதிப்பதும் நமது பொறுப்பாகும். தலித்துகளை மோசமாக நடத்துவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? சமூகத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே நமது முன்னுரிமையாகும். இந்தப் பிரச்னை சமூகப் பிரச்னை என்று எனக்குத் தெரியும். கசப்புணர்வு என்ற ஆபத்தில் இருந்து தலித் சமூகத்தைக் காக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஜாதி, மதம், சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் பிளவுபட அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க நடைபெறும் முயற்சிகளால் பிரச்னை மேலும் பெரிதாகவே செய்யும். இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பிளவுபடுத்தும் அரசியலானது நாட்டுக்கு எந்த நன்மையும் பயக்காது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தலித்துகளுக்கு விரோதமான அரசு என்பதுபோல் சித்தரிக்க சிலர் முயல்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு உரிய மரியாதை அளித்து அவருக்கு புகழ்சேர்த்து வருவது எனது தலைமையிலான அரசுதான்.
தலித்துகள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். தலித்துகளின் வாக்கு வங்கியை இழந்து வரும் சில அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் தலித்துகளை கேடயமாக வைத்து என் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தலித்துகளை காக்க வேண்டியது நமது கடமை. தலித்துகளை யாராவது தாக்க விரும்பினால் அவர்கள் முதலில் என்னை தாக்கட்டும். தலித்துகள் மீதான தாக்குதலுக்கு நாம் முடிவுகட்ட வேண்டும்.
போலி பசுக் காவலர்கள்: “தங்களை பசுக்களின் காவலர்கள் என்று காட்டிக் கொள்ளும் சிலர் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்தப் போலியான பசுக் காவலர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறேன். இவர்கள் பசுக்களின் பாதுகாப்புக்காக எதையும் செய்வதில்லை. இவர்களை மாநில அரசுகள் கண்டறிந்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பதற்கான ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான “மிஷன் பாகீரதா’ திட்டத்தை மேடக் மாவட்டம், கஜ்வேல் தொகுதியில் அடங்கும் கோமதிபாண்டா கிராமத்தில் மோடி தொடங்கி வைத்தார். முதல்வர் சந்திரசேகர ராவின் தொகுதி கஜ்வேல் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தனது தெலங்கானா பயணத்தின்போது, ஹைதராபாதையும் கரீம்நகரையும் இணைக்கும் 152 கி.மீ. நீள மனோகராபாத்-கொத்தபள்ளி ரயில் பாதைத் திட்டம், ராமகுண்டத்தில் அமைக்கப்பட உள்ள தேசிய அனல் மில் நிறுவனத்தின் தெலங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டம், வாரங்கல் நகரில் உருவாக உள்ள கலோஜி நாராயணராவ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கரீம்நகரில் புதுப்பிக்கப்பட உள்ள ராமகுண்டம் உர ஆலை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார், சுரேஷ் பிரபு, பியூஷ் கோயல், பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-http://www.dinamani.com
இந்திய பிரதமர் மோடி வெறும் பேச்சோடு நில்லாமல் இதை போன்ற நிகழ்வுகள் நடக்கவிடாமல் சரியான தீர்வு அல்லது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் இல்லையெனில் நாடு நரகமாக போய்விடும்.
இது காலம் காலமாக நடக்கிறது– இதனால்தான் அவ்வளவு பேர் இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும் தாவினார்கள். இந்த நாளிலும் பகுத்தறிவு இல்லாமல் பேசும் இந்துத்துவ நாதாரிகளை ISIS போன்ற ஈன ஜென்மங்களுக்கு தான் ஒப்பிட முடியும். இன்னொரு உயிரை மதிக்க தெரியாத மதிக்க அறிவில்லா ஜென்மங்களை எப்படி மதிக்க முடியும்? நம்-வாழ்க்கை முறை- துளசி போன்ற செடிகளையும் மாடு போன்ற வற்றை மதிப்பதும் அம்மன் சரஸ்வதி லெட்சுமி போன்ற பெண்களை கும்பிடுவதும் வேறு எங்கும் கிடையாது. இவ்வளவு பரந்த மனமுடைய நம் கலாச்சாரத்தை இந்த ஜாதி பித்து பிடித்த ஈன ஜென்மங்கள் பண்ணும் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் தான் மனிதாபிமானம் தலைக்கும். எல்லாரும் இந்தியர்கள்-தமிழர்கள் என்று என்னும் மனமில்லா பிண்டங்களை என்ன என்று கூறுவது? பிறப்பால் தன்னை உயர்த்தி மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று என்னும் புத்தியை எதனால் அடிப்பது? வெள்ளையர்கள் தோலை பார்த்து தாழ்ந்தவர்கள் என்று மற்றவர்களை ஓரங்கட்டியது எவ்வளவோ மாறி எல்லாரும் சமம் என்ற நிலை ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தமட்டில் நல்லவர்கள்- கெட்டவர்கள் மட்டுமே எப்படி நடத்தப்பட வேண்டும் என்று காட்டுபவர்கள். அங்கு குடியிருப்புகள் சுத்தம் இல்லாமலும் வியாதிகள் கூடமாகவும் இருப்பதை பற்றி அக்கறை இல்லாத ஜென்மங்கள். உன்னால் முடியும் தம்பி -திரைப்படம் போல் ஏன் தங்களின் வசிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க முடியாது? அங்குள்ளவர்கள் இதயங்களை clorox போட்டு சுத்தப்படுத்தினால் சுத்தம் ஆகாது. மற்ற நாடுகளை பார்த்தாவது திருந்த வேண்டாமா?