முக்கியமானது – வாக்காளர் வசதியாகும்! மற்றவை அல்ல!

கி. சீலதாஸ், ஏப்ரல் 24, 2018.

பொதுத்  தேர்தலுக்கான  வேட்புமனு  தாக்குதல்,  வாக்குப்பதிவு  செய்தல்,  தேர்தல்  முடிவுகளை  அறிவித்தல்  போன்ற  நடவடிக்கைகளுக்கான  தேதிகள்  அறிவிக்கப்பட்டுவிட்டன.  ஒரு  வாக்காளர்  தொகுதியில்  தமது  முகவரியைப்  பதிவு  செய்த   வாக்காளர்  நடந்து  முடிந்த  தேர்தல்களில்  எந்த  இடத்தில்  வாக்களித்தாரோ  அதே   வாக்குச்  சாவடிக்குப்  போகத்  தயாராகிவிடுகிறார்.  இது  இயல்பான  சூழல்.  கடந்தத்  தேர்தலில்  வாக்களித்த  வாக்குச்  சாவடி  தமது  இருப்பிடத்திற்கு  அருகாமையிலேயே  இருக்கலாம் அல்லது  வெகுத்தொலைவுக்குப்  போக  வேண்டிய  நிர்பந்தம்  ஏற்படாது.  வாக்காளர்களின்  வசதிதான்  முக்கியம்;  அதாவது,  போக்குவரத்து  வசதி,  வெகுநேரம்  காத்திருக்க  வேண்டியதைத்  தவிர்ப்பது,  போன்றவைகள்  கவனத்தில்  கொண்டிருக்க  வேண்டும்.  சுருக்கமாகச்  சொன்னால்  வாக்காளர்களின்  சௌகரியம்தான்  முக்கியமே  அன்றி  அரசியல்வாதிகளின்  திருவிளையாடல்களுக்கு  இடம்  அளிக்கக்  கூடாது.  இந்த  நல்ல  செயல்களை யார்  பாதுகாக்க  வேண்டும்?  தேர்தல்  ஆணையம்.  இந்தத்  தேர்தல் ஆணையத்தின்  தலைவர்  பேரரசரால்,  மற்ற  ஆட்சியாளர்களோடு  கலந்து  ஆலோசித்து,  நியமிக்கப்படுகிறார்.  அவர்  நடுநிலை  வகிக்க  வேண்டும்,  வாக்காளர்களைப்  பாதுகாக்க  வேண்டும்.

தேர்தல்  ஆணையத்தின்  அடிப்படைக்  குறிக்கோள்கள்  என்ன? அதை  அரசமைப்புச்  சட்டம்  அல்லது  ஏனைய  தேர்தல்  தொடர்பானச்  சட்டங்கள்  விளக்கவில்லை.  ஆனால்,  அரசமைப்புச்  சட்டத்தின்  பதின்மூன்றாம்  பின்னிணைப்பானது  வாக்காளர்  தொகுதியை  மாற்றம்  செய்யும்போது  கவனத்தில்  கொள்ளவேண்டிய  சில முக்கியமான  நெறிமுறைகளைத்  தெளிவுப்படுத்துகிறது.  நாடாளுமன்றம்,  மாநிலச்  சட்டப்பேரவைகளின்,  வாக்காளர்  தொகுதிகளை  நிர்ணயிக்கும்போது  கருத்தில்  கொள்ளவேண்டியவற்றைக்  குறித்து  விளக்கம்  தந்திருப்பதைக்  காணலாம்.

மேலே  குறிப்பிட்டுள்ள  பதின்மூன்றாம்  பின்னிணைப்பின்  இரண்டாம்  பிரிவில்,  எல்லா  வாக்காளர்களும்  பதிவு  செய்யப்போவதற்கான  எல்லாவிதமான  நியாயமான  வசதிகளைக்  கவனத்தில்  கொண்டிருக்கவேண்டும்.  வாக்காளர்  தொகுதி  எல்லையை  மாற்றம்  செய்யும்போது  மாநில  சட்டமன்ற  அல்லது  நாடாளுமன்ற  வாக்காளர்  தொகுதி  எல்லையைக்  கடந்து சென்று  வாக்களிக்கச்  செய்யக்கூடாது.

எடுத்துக்காட்டாக,  ரோபர்ட்முருகன்,  இந்தப்  பிரிவின்படி  ஒரு  நாடாளுமன்ற,  சட்டமன்ற  தொகுதியில்   வாக்காளராகப்  பதிவு  செய்துள்ளார்.  ரோபர்ட்முருகன்,  கடந்த  தேர்தல்களில்  அவர்  இல்லத்தில்  இருந்து  சுமார்  ஒரு  கிலோ  மீட்டர்  கூட  தாண்டாத  ஒரு பள்ளிக்கூடத்தில்  அமைக்கப்பட்ட  வாக்குச்  சாவடியில்    தமது  வாக்கைப்  பதிவு  செய்தார்.  இதில்  நியாயம்,  நேர்மை  இருந்தது.  வாக்காளர்களின்  வசதிக்கு  முதலிடம்  கொடுக்கப்பட்டது.  நடந்து  முடிந்த  மூன்று  பொதுத்தேர்தல்களிலும்   கடைசியாக  வாக்களித்த  வாக்குச்  சாவடியில்  வாக்களித்தவரின்  புதிய  வாக்காளர்  பட்டியலின்படி  சுமார்  ஐந்து  கிலோ  மீட்டர்  தொலைவில்  உள்ள  பள்ளிக்கூடத்திற்கு  மாற்றப்பட்டிருக்கிறது.   அவருக்கும்  வயதாகிவிட்டது.  பயணம்  செய்வது  சங்கடமாக  இருக்கலாம்.  எனவே,  இப்படிப்பட்ட  வாக்காளர்  தொகுதி  மாற்றம்  நியாயமானதா?  நேர்மையானதா?  நாணயமானதா?  என்று  கேட்டால்  அதில்  நியாயம்  இருக்கிறது  அல்லவா?

இப்படிப்பட்ட  வாக்குச்  சாவடி  மாற்றத்தால்  வாக்காளர்களுக்கு  அசௌகரியம்  ஏற்படுத்தப்படுகிறது.  எனவே,  அவர்கள்  வாக்களிக்கப்  போகாமல்  இருந்துவிடுவார்கள்.  இப்படிப்பட்ட  சூழ்நிலையை  உருவாக்குவது  ஜனநாயகத்திற்கு  முரணானச்  செயல்  என்பதோடு  அது  ஒரு  பெரும்  மோசடி  என்றாலும்  தகும்.  இப்படிப்பட்ட  மோசடிகளுக்கு  வழிவகுத்தவர்களை  நம்பமுடியுமா?  தயாரிக்கப்பட்ட  வாக்காளர்   பட்டியலைத்தான்  நேர்மையானது  என்று  சொல்ல  தயக்கம்  மேலிடுகிறது  அல்லவா?.  அதே  வேளையில்  வாக்காளர்  பட்டியல்  மோசடிக்கு  ஒப்புதல்  நல்கியவர்களை  இனிமேலும்  நம்புவதில்  ஏதாகிலும்  அர்த்தம்  உண்டா?

எடுத்துக்காட்டுக்காக  நாம்  எடுத்துக்கொண்ட  ரோபர்ட்டின்  சங்கடமான  நிலை  பல  நூறு  அல்லது   ஆயிரக்கணக்கான  வாக்காளர்களைப்   பாதித்திருக்கக்கூடும்.   பாதிப்படைந்தனர்  என்றால்,  தேர்தல்  ஆணையத்தின்மீது  சந்தேகம்  எழுகிறது.  புது  வாக்காளர்  பட்டியலை  பிரதமர்  அங்கீகரிக்கவேண்டும்    எனும்போது  அதில்  அரசியல்  நோக்கம்  தலையிட  வழி  உள்ளது  என்ற  எண்ணமும்  ஏற்படும்.  இதைத்  தவிர்காதது  ஏன்?  இப்படிப்பட்ட  வாக்காளர்  தொகுதியில்  செய்யப்பட்ட மாற்றங்கள் நாடாளுமன்றத்தில்  அங்கீகரிக்கப்பட்ட  நெறிமுறைகளுக்கு  எதிரானவை  என்றால்  மிகையாகாது.  அதுமட்டுமல்ல,  இப்படிப்பட்ட  மாற்றம்  அநீதியானது,  பாரபட்சம்  கொண்டது.  வாக்காளரின்  நலனுக்கு  முக்கியத்துவம்   தராமல்  வேறு  ஏதோ  ஒரு  முடிவைக்  காண  எடுக்கப்பட்ட  நடவடிக்கை  என்று  சொல்ல  தோன்றும்.   நடுநிலை  வகிக்க  தேர்தல்  ஆணையம்  தவறிவிட்டது  என்ற  குற்றச்சாட்டும்  பிசகு  அல்லவே.

எங்கெல்லாம்  அநியாயம்,  அநீதி  தலைவிரித்தாடுகின்றதோ    அதை நீக்கும்  உரிமையும்,  தகுதியும்  வாக்காளர்களுக்கும்  உண்டு.  வாக்காளர்கள்  துணிவோடு  செயல்படவேண்டும்  என்பதே  நிகழ்கின்ற அநீதிகள்  நினைவுப்படுத்துகின்றன.