மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பேசியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “பா.ஜனதாவின் சனாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும்.
காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி” என்று அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.
-தினத்தந்தி