மடிக்கணினிகளில் (Wi-Fi) வைஃபை மூலம் இணையத்தினை பயன்படுத்தும்போது ஆண்கள் அக்கணினிகளை தமது மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு மடியில் வைத்து மடிக்கணினிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் டப்லட் ஊடாகவும் வைஃபை பயன்படுத்தும் போதும் இது குறித்து அவதானமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்த ஆய்வின்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. வைஃபை இல்லாமல் மடிக்கணினியை பயன்படுத்தியோரை பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும் ஆனால் வைஃபை-ஐ பயன்படுத்தியபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர மடிக்கணினிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மடிக்கணினிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து பயன்படுத்துவதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.