உயிரிழந்துவிட்டார் என நினைத்த நபர் 23 வருடங்களுக்குப்பின் இலங்கையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்!

இலங்கையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க வேண்டும் என அவரின் மகள் சரவண சுந்தரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட் கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறைச் செயலர், தமிழக உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

23 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பரதன் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இவரது மனைவி சரசு. இவர்களுக்கு சரவணசுந்தரி, முத்துலட்சுமி என்ற இரு மகள்களும், மாரி என்ற மகனும் உள்ளனர்.

மீன்பிடித் தொழிலாளியான பரதன் கடந்த 1996-ம் ஆண்டு 4 பேருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் விபத்தில் சிக்கியதில் பரதன் மாயமானார். நீண்ட நாள்களாக தேடியும் பரதன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அவர் கடலில் மூழ்கி இறந்திருப்பார் என உறவினர்கள் நினைத்திருந்தனர். மீன் வளத்துறைப் பதிவேட்டிலும் அவ்வாறே பதிவாகி இருந்தது.

23 ஆண்டுகளில், அவரின் 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் பரதனின் குடும்பத்தினர் செல்போனில், இலங்கையில் பிச்சைக்காரர்களின் நிலை குறித்த வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளனர்.

அதில் பிச்சைக்காரர்களின் வரிசையில் பரதனை போன்ற ஒருவர் இருப்பதை கண்டுள்ளனர்.

பரதனின் பழைய படமும், வீடியோவில் வந்த நபரின் உருவமும் ஒற்றுமையாக உள்ளதால் அவர் உயிருடன் இருப்பதை உறுதியாக நம்புகிறோம்.

அவருடைய மனைவி சரசு தற்போது மனநிலை சரியில்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரிடம் கணவரை அடையாளம் காட்டுமாறு கூற முடியாத நிலை உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் பரதனை மீட்டு கொண்டுவரக் கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, இலங்கையில் வயது முதிர்ந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவரின் மகள் சரவண சுந்தரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட் கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறைச் செயலர், தமிழக உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

-athirvu.in

TAGS: