காஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும், இந்தியாவின் பதிலும்

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெனிவா ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த இந்திய ஒன்றிய அமைச்சர் ஜித்தேந்திர சிங், “பயங்கரவாதத்தின் மையமாக இருக்கும் ஓர் இடத்திலிருந்து வரும் பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து இவ்வுலகம் தெளிவாக இருக்கிறது” என்றார்.

என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை ஐ.நாவிற்கும் கொண்டு சென்றது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

அவர், “காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஒரு தோற்றத்தை அளிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனால், அப்படி இயல்புநிலை திரும்பி இருந்தால், அரசு சாரா அமைப்புகளை, சர்வதேச ஊடகங்களை அங்கு அனுமதிக்க வேண்டியதுதானே?. இதிலிருந்தே இந்தியா பொய் கூறுவது தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் போது, உண்மை வெளி உலகிற்குத் தெரிய வரும்” என்றார்.

இந்தியாவின் பதில்

முன்னதாக இந்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், “காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவோ அல்லது முழுமையான தடையோ இல்லை. சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. இது போன்ற இந்தியா மீதான குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

தேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது என்.ஆர்.சி தொடர்பாக, “இது பாரபட்சமற்ற சட்ட செயல்முறை, இந்திய உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது.” என்றார். -BBC_Tamil

TAGS: