பாகிஸ்தானுடன் போருக்கு தயார் என்று இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா என்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகிஸ்தானுடன் ராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
நான் 2017-ம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றபோது, எனது கீழ்நிலை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். அதில், நமது எதிரி போர் புரிய முடிவெடுத்தால், குறுகிய இடைவெளியில் போருக்கு தயாராக வேண்டும் என்று எழுதி இருந்தேன்.
இருந்தாலும், பாகிஸ்தான் மக்களை கவரவே அந்நாட்டு தலைவர்கள் அப்படி பேசி வருகிறார்கள். பாகிஸ்தானின் போர்த்திறன் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இது இருமுனை போராக இருக்காது.
நம்மிடம், சுகோய்-30 ரக விமானங்களும், ‘பிரமோஸ்’ சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றுக்கு பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாது.
‘ரபேல்’ போர் விமானம் வந்த பிறகு, விமானப்படையின் வலிமையில் பெரும் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC_Tamil