இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் விளையாட்டில் சாதிக்க முடிகிறதா?

டோக்கியோவில் இந்தாண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், ரியோவில் நடந்த முந்தைய ஒலிம்பிக் போட்டிகளைவிட சிறந்த பங்களிப்பை தர வேண்டிய பொறுப்பு இந்திய வீராங்கனைகளுக்கு உள்ளது.

கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டனில் பி.வி. சிந்து வென்ற வெள்ளிப்பதக்கமும், மல்யுத்த பிரிவில் சாக்ஷி மாலிக் வென்ற வெண்கல பதக்கமும்தான் அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்கள் ஆகும்.

2019-இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பி.வி. சிந்து வரவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளில் இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பு மற்றும் ஆட்ட திறனை பறைசாற்றுவதாக அமைகிறது.

துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, மல்யுத்தம், பேட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பல ஒலிம்பிக் விளையாட்டு பிரிவுகளில் ஆண் போட்டியாளர்களை விட பெண் வீராங்கனைகள் பல சமயங்களில் கூடுதலாகவே பங்கேற்கின்றனர்.

ஆணாதிக்கம் நிரம்பிய நாட்டில், குறிப்பாக சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்கள் பல பிரச்சனைகளை சந்தித்துவரும் நிலையில், விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவில் பெண் வீராங்கனைகளுக்கு பல சிரமங்கள் உள்ளன. இவற்றை தாண்டியே அண்மைய ஆண்டுகளில் இந்திய வீராங்கனைகள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பிய வீரர்களின் எண்ணிக்கை 72. அதில் பளுதூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வென்ற வெண்கல பதக்கம் மட்டுமே அந்த போட்டியில் இந்தியா வென்ற ஒரே பதக்கம்.

அதேவேளையில் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் 117 வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றனர். இதில் 54 பேர் பெண்கள். இவர்கள் இரண்டு பதக்கங்களை நாட்டுக்கு வென்று தந்தனர்.

விளையாட்டில் பங்கேற்பதில் ஆண்களை ஒப்பிடும்போது, பெண் வீராங்கனைகளின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பை அவர்களின் குடும்ப சூழல், பொருளாதார நிலை போன்ற பல காரணங்கள் பாதிக்கின்றன.

இந்தியாவில் விளையாட்டு போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு நிலை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ள நிலையில், பெண் குழந்தைகளின் பெற்றோரின் விருப்பம் குறித்து இந்திய இளையோர் அணியின் பங்களிப்பு அதிகரிப்பு பயிற்சியாளரும், 1990-2000 காலகட்டத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி பிரிவில் பங்கேற்ற சுமா ஷிரூர் கூறுகையில், ”பெரும்பாலான பெற்றோர் தங்களின் பெண் குழந்தைகளை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் விளையாட ஊக்குவித்து வருகின்றனர். அண்மையில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் ஆண் மற்றும் பெண் வீரர்களின் எண்ணிக்கை சம அளவில் இருந்ததே இதற்கு சான்று” என்று கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து, நாட்டில் பெண்கள் விளையாட்டு போட்டிகளை விரும்பிப் பார்ப்பது அதிகரித்துள்ளது.

பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என பெண்கள் விளையாடுவதை தடுத்துவந்த சமூகமும், பெற்றோரும் தற்போது பெண்கள் விளையாடுவதை ஆதரிக்கின்றனர்.

முந்தைய காலங்களை ஒப்பிட்ட ஷிரூர், ”தற்போதைய பெண்கள் மிகவும் தைரியமாக, தன்னம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 19-ஆம் தேதியன்று மூன்றாவது முறையாக டாட்டா மும்பை மராத்தான் பட்டத்தை வென்ற சுதா சிங் கூறுகையில், ”2010 காமன்வெல்த் போட்டிகளுக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது. நான் விளையாடிய காலத்தை விட தற்போது பல மாற்றங்கள் வந்துவிட்டன. பெண்கள் விளையாடுவது குறித்து கேள்வி கேட்டவர்கள், தற்போது பெண்களின் விருப்பத் தேர்வு குறித்து குரல் எழுப்புவதில்லை” என்று தெரிவித்தார்.

பி.வி. சிந்து, போகத் சகோதரிகள், சானியா மிர்சா, மேரி கோம் போன்ற பிரபல வீராங்கனைகளின் சாதனைகள் மற்ற இளம் வீராங்கனைகளை சாதிக்க தூண்டுகிறது.

தற்போது பெண் பயிற்சியாளர்கள் அதிகளவில் இருப்பதும், பெண் வீராங்கனைகள் உருவாக்குவதற்கு உதவுவதாக கூறப்படுகிறது.

பெண்கள் விளையாடுவதில் பெரும் மாற்றங்கள் உருவான போதிலும், இன்னமும் நாட்டில் மாற வேண்டியது எவ்வளவோ உள்ளது என்றே கூற வேண்டும்.

ஆண்களை போல போட்டிகளுக்கு பெண்கள் பயணம் செய்வதில் பல தடைகள் இருக்கத்தான் செய்கிறது.

”தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் விளையாடுவது தொடர்பாக சில சமயங்களில் பெற்றோரின் தலையீடு அதிகமாக உள்ளது. தங்கள் பெண் குழந்தையின் பாதுகாப்பது குறித்து அதிகமாக அச்சப்படும் சில பெற்றோர், அவர்கள் விளையாட்டுக்காக பயணம் செய்வதில் சில தடைகள் விதிக்கிறார்கள்” என்று தேஷ்பாண்டே என்ற வடிவமைப்பாளர் எடுத்துரைத்தார்.

மேலும் நாட்டில் பிரபல விளையாட்டாக உள்ள கிரிக்கெட் மற்ற விளையாட்டுக்களை பாதிப்பதாக சிலர் கருதுகின்றனர்.

ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களை போல் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.

துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சர்வதேச அளவில் பல மெடல்கள் வென்றுள்ள 17 வயது இளம் வீராங்கனையான மனுவின் தந்தையான ராம் கிஷன் பாக்கர் கூறுகையில், ”இது விளையாட்டு கலாசாரத்தையே பாழ்படுத்துகிறது” என்று கூறுகிறார்.

ஹரியாணா மாநிலத்தில் கோரியா என்ற கிராமத்தை சேர்ந்த அவர், ”நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்களை போல ஆசிய அல்லது காமன்வெல்த் போட்டி சாம்பியன்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் இளம் பெண்கள் மெடல்கள் குவித்தாலும், செய்தித்தாள்களில் ஹர்திக் பாண்ட்யாவின் அரை நிர்வாண படம் தான் வெளிவந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா போன்ற ஒரு பெரும் நிலப்பரப்பு உள்ள நாட்டில் பெண் வீராங்கனைகள் வளர்வதில் பல தடைகள் இருந்தாலும், தற்போதைய நிலை முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நகரங்களை போலவே கிராமங்களுக்கும் இந்த நிலை வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

”ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும், நான் அதை ஒப்புக்கொள்வேன். பெண்கள் ஆண்களுக்கு இணையாக சாதிக்க தங்களை மேலும் வலிமையாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் கலாசார தடைகளையும் அவர்கள் உடைத்தெறிய வேண்டும்” என்று ஷிரூர் மேலும் கூறினார்.