தனியாக வாழும் முதியோர்களுக்காக பராமரிப்பு இல்லம் அமைக்கவும், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறினார்.
புதுடெல்லி : மாநிலங்களவையில், தேசிய முதியோர் நல திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் கருவிகளின் தரம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சமூகநீதித் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறியதாவது:-
முதியவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கருவிகள் வழங்கப்படுகிறது. சக்கர நாற்காலி, ஊன்றுகோல் போன்றவை இந்திய தரம் மற்றும் சர்வதேச தரத்துடன் வழங்கப்படுகிறது. செயற்கை கைகள் மற்றும் கால்கள் செய்யும் தொழில்நுட்பம் ஜெர்மனியில் இருந்தும், நவீன சக்கர நாற்காலிக்கான தொழில்நுட்பம் ஸ்காட்லாந்தில் இருந்தும் பெறப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் தொழிற்சாலை ஒன்று இந்த கருவிகளை தயாரிக்கிறது. ஆனாலும் இன்னும் தரமான கருவிகளை தயாரிக்கவும், வழங்கவும் சர்வதேச நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 10.38 கோடி முதியோர்கள் இருக்கிறார்கள். 2007 சட்டப்படி அனைத்து மூத்த குடிமக்களையும் கவனிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தனியாக வாழும் முதியோர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக்கொள்ள வகைசெய்யும் ஒரு சட்டம் கொண்டுவருவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அந்த சட்டத்தின்படி தனியாக வாழும் முதியோர்களுக்காக பகல்நேர பராமரிப்பு இல்லம் அமைக்கப்படும். அந்த இல்லங்களில் மூத்த குடிமக்கள் மாலை வரை தங்கள் பொழுதை கழிக்கலாம். அந்த இல்லங்களில் நூலகம், உணவு விடுதி மற்றும் இதர வசதிகள் இருக்கும்.
அதேபோல தனியாக வாழும் முதியோர்களை தொண்டு நிறுவனங்கள் கவனித்துக்கொள்ளும் வகையில் ஒரு புதிய திட்டத்தையும் அரசு கொண்டுவர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.