அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்… உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்

காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின.

வாடிவாசலில் இருந்து  சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

வீரர்கள் யாரையும் தன் அருகே வரவிடாமல், திமிலை பிடிக்க அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 8 சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர் அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவார். இறுதியாக அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்றாக ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன. எனினும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

malaimalar