ஏனோ தானோ அமைச்சரவையில் – ஹிரோவாகும் கைரி!

இராகவன் கருப்பையா – தனது புதிய அரசாங்கத்திற்கு அமைச்சர்களை நியமனம் செய்ததில் பிரதமர் இஸ்மையில் செய்த உருப்படியான ஒரே காரியம் கைரி ஜமாலுடினை சுகாதார அமைச்சராக நியமித்ததுதான்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டைச் சீர்குலைத்த அதே அமைச்சர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்ததால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்குள்ளான பிரதமரை இந்த ஒரு நியமனத்தில் மட்டும் மக்கள் பாராட்டத் தவறவில்லை.

கோறனி நச்சிலின் கோரத்தாண்டவத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மக்களின் கவனமும் இப்போது கைரியின் மீதுதான் உள்ளது என்பதையும் நாம் மறுக்க இயலாது.

முன்னைய அரசாங்கத்தில் பல வேளைகளில் பெரும்பாலான அமைச்சர்களின் கோமாளித்தனமான நடவடிக்கைகளின் மத்தியில் தனது பொறுப்பில் சிறப்பாகத்  துடிப்புடன் செயல்பட்ட ஒரே அமைச்சர் கைரி மட்டும்தான் என்பதையும் மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

தடுப்பூசி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பல நிலைகளில் தொடர்ச்சியான சவால்களுக்கிடையே நாட்டின் மக்கள் தொகையில் தற்போது ஏறத்தாழ 46 விழுக்காட்டினருக்கு 2 ஊசிகளும் செலுத்தி முடிக்க அவர் வகை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் மக்களின் எதிர்பார்ப்புகள் அவர் மீது இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மக்களைக் குழப்பாத அளவுக்கு ஒருங்கிணைக்கப்படும் என்றும் தமது அமைச்சு வெளியிடும் தகவல்கள் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக இருக்கும் எனவும் அவர் செய்த அறிவிப்பு நம் எல்லாருக்குமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இருந்த போதிலும் அடுத்த 100 நாள்களில் நோய்த் தொற்றும் மரண விகிதமும் குறைக்கப்படும் என்று அவர் கூறியதை நம்மால் ஜீரணிக்க இயலவில்லை.

ஏனெனில் நம் நாட்டின் தற்போதைய கடுமையான நிலையை வைத்துப் பார்த்தால் 100 நாள்கள் என்பது குறுகிய காலமில்லை.

கடந்த 10 நாள்களின் சராசரித் தொற்று நாள் ஒன்றுக்கு 21,331ஆக இருக்கும் வேளையில் மரண விகிதம் 289ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்த 100 நாள்கள் என்பது நமக்கு மிகுந்த அச்சத்தையே கொடுக்கிறது.

உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைந்த பட்சம் அடுத்த 30 நாள்களில் அன்றாட  மரண எண்ணிக்கையை 50கும் குறைவாகக் கொண்டு வந்தால்தான் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கை அர்த்தம் பொதிந்ததாக இருக்கும்.

இது சாத்தியமில்லாத ஒரு எண்ணிக்கை என்று சொல்ல முடியாது. ஏனெனில் ‘குரங்குக் கையில் பூமாலை’ கிடைத்த மாதிரி சம்பந்தப்பட்ட அமைச்சுகளைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கூத்தாடிய சில அமைச்சர்களினால்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலைமை இவ்வளவு மோசமானது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான சிலாங்கூரில் கூடத் தடுப்பூசி நடவடிக்கைகள் பன்மடங்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் மாநிலத்தில்   உள்ள மருத்துவமனைகளின் படுக்கைப் பயன்பாடு 50%க்குக் குறைந்துள்ளதாக ஒரு சில தினங்களுக்கு முன் மந்திரி பெசார் அமிருடின் கூறினார்.

ஆகக் கைரி தமது இலக்கை மறு ஆய்வு செய்து அடுத்த ஒரு மாதத்தில் நோய்த் தொற்றையும் மரண எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்து நலிந்து கிடக்கும் நம் நாட்டின் கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தை அவசியம் ஏற்படுத்த வேண்டும்.

தினம்தோறும் அதிக அளவில் அடையாளம் காணப்படும் வேலையிடத் திரள்களுக்குத் தீர்க்கமான ஒரு முடிவு காணப்பட்டால் நிலைமை சற்று வேகமாகச் சீரடைய வாய்ப்பிருக்கிறது.

இதற்கிடையே இவ்வாண்டில் இதுவரையில் மொத்தம் 41 சிறுவர்கள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி நம் அனைவரின் இதயங்களையும் ஈட்டி போலத் தாக்கியுள்ளது.

ஏற்கெனவே 17,000திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக மரணித்துள்ள நிலையில் இது போன்ற சோகங்கள் நிலைமையை மேலும் மோசமாக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு அடுத்த அலையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளையும் கைரி இப்போதே முடுக்கிவிடுவது அவசியமாகும்.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகள் கூட அடுத்த அலையை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி, மும்பாய், சென்னை, கோல்கத்தா, முதலிய பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அவசரமாக விரிவாக்கம் செய்யப்பட்டு மருத்துவ வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்நோயின் தாக்கத்தினால் நீண்ட நாள்களாகத் துன்பத்திலும் துயரிலும் மூழ்கிக் கிடக்கும் வெகுசன மக்களின் கண்களுக்கு ஒரு ‘ஹீரோ’வாகக் காட்சியளிக்கும் கைரி அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாட்டில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.