[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும் நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும் சிறப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
அந்த மாநாட்டில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் சம்பந்தப்பட வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் தொடர்பான பல அம்சங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பது, பள்ளிக்கூடங்களின் வடிவமைப்பு, பள்ளிக்கூடத்துக்கான தேவைகள் ஆகியவை உட்பட தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகளும் அந்த மாநாட்டில் ஆராயப்பட வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை கல்வி அமைச்சும் அரசாங்கமும் பரிசீலினைக்கு எடுத்துக் கொண்டு தமிழ்ப்பள்ளிக் கூடங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் நஜிப் தெரிவித்தார்.
2007-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி பொது இயக்கங்களை பிரதிநிதித்து சுமார் 2,000 பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் முன்பு கூடி தமிழ்ப்பள்ளிகள் எதிநோக்கும் பிரச்னைகளை முன்வைத்தனர். அந்த மகஜரும் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. 2008-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகுதான் நாம் இந்த புதிய மாற்றங்களை காண்கிறோம்.
கெடா, பேராக், சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மேலும் ஆறு தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படுவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ள தகவலையும் பிரதமர் அந்த நிகழ்வில் வெளியிட்டார். இது உண்மையானல் இறுதியில் நமது பள்ளிகளின் எண்ணிக்கை 523 இல் இருந்து 529ஆக மாறவேண்டும். மாறுமா? அல்லது முன்பு போல் ஒரு சொல் விளையாட்டகவே இருக்குமா என்பதை பிரதமர் விளக்கவேண்டும். அதிக பள்ளிகள் என்றால், 1957 முதல் நாம் இழந்த 365 பள்ளிகள் என்ற எண்ணிக்கை 359 ஆக குறையும். அப்படி இல்லையென்றால் இந்த அறிவிப்பு இன்னொரு நாடகமே!
2007 ஆம் ஆண்டு பிரமருக்கு சமர்பித்த மகஜர் இதுதான். அவர்தான் சொல்லவேண்டும் எதனால் தாமதம், தொடந்து ஏன் நம்மை விலைபேச மட்டுமே அழைக்கிறார்கள் என்று.
மலேசிய பிரதமருக்கான மகஜர் தேதி 29.3.2007
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
“தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்”
1. பதியம்
மலேசிய மக்களாகிய நாங்கள், கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் ஆளுமைக்கும் ருக்குன் நெகாராவின் வழிகாட்டலுக்கும் உட்பட்ட, இந்நாட்டின் அனைத்து உரிமைகளையும் கொண்ட குடிமக்களாவர். கூட்டரசு அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு உரிமைகளை வழங்கியிருக்கிறது. அந்த உரிமைகளில் ஒரு தனிமனிதன், ஒரு சமூகம் விரும்பும் இலட்சியங்களை அடைவதற்கு, விரும்பியவாறு வாழ்வதற்கு, முன்னேறுவதற்கு, மேம்பாடு அடைவதற்கு, பாதுகாப்புப் பெறுவதற்கு, வேண்டியதை அனுபவிப்பதற்கு, விரும்பியதைச் செய்வதற்கு, அடைவதற்கு உரிய உரிமைகளும் அடங்கும். அமைதியாகவும், கௌரவமாகவும், சுபிட்சமாகவும் வாழ்வதற்கு இந்த உரிமைகள் அனைத்து குடிமக்களுக்கும் உரித்ததாகும்.
பல்வேறு நிலையிலுள்ள மக்களைப் பிரதிநிதிக்கும் நாங்கள் மலேசிய அரசாங்கம் அதன் குடிமக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் தலையாய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று திடமாக நம்புகிறோம்.
2. எங்களுடைய சட்டப்பூர்வமான நிலை
கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொள்கிறோம்:
2. 1 கூட்டரசு அரசமைப்புச் சட்டவிதி 8இன் கீழ் ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் சமமானவர்; சமமாக நடத்தப்படுவதற்கும் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
2.2 கூட்டரசு அரசமைப்புச் சட்டவிதி 12 கல்வி ஓர் அடிப்படை மற்றும் அரசமைப்புச் சட்டரீதியான உரிமை என்று உத்தரவாதம் அளிக்கிறது.
2.3 கூட்டரசு அரசமைப்புச் சட்டவிதி 152 தாய்மொழிக் கல்வியைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும், போதிப்பதற்கும், கற்பதற்கும் வகை செய்கிறது.
2.4 கூட்டரசு அரசமைப்புச் சட்டவிதி 5 மனிதன் இயற்கையாகப் பெற்ற கௌரவத்தைப் போற்றிக் காக்கவும் உயர்த்தவும் கல்வி இன்றியமையாததாக இருப்பதால் கல்வி கற்பதற்கான உரிமை அடிப்படையானது என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது.
2.5 தாய்மொழிக்கல்வி பெறும் வேட்கை பரிவுள்ள சமுதாயத்தின் பாவனைக்குட்பட்டு இருப்பது தூரநோக்கு 2020 பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.6 ஐக்கிய நாட்டு சபையின் குழந்தைகளுக்கான ஒப்பந்தம் [விதி 29 (1) (a) “குழந்தையின் கல்வி அக்குழந்தையின் தனிப்பட்ட குணம், திறமை, மனம் மற்றும் உடலாற்றல் ஆகியவற்றின் முழு மேம்பாட்டை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்”, என்று கூறுகிறது. இதனை தாய்மொழிக் கல்வி குழந்தையின் வளர்ச்சி காலத்தில் முழுத் திறனையும் வெளிக் கொணர்கிறது என்ற ஆய்வின் முடிவுடன் சேர்த்து வாசிக்க வேண்டும்.]
2.7 தாய்மொழியில் கல்வி கற்பது எங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உரிமை என்று கீழ்க்கண்ட அனைத்துலகச் சாசனங்கள் கூறுகின்றன.
(அ) பொதுவான மனித உரிமைப் பிரகடனம் விதி 26(2): கல்வியின் நோக்கம் மனிதனின் தனித்தன்மையை வளர்ப்பதாகவும் மனித உரிமைக்கு மதிப்பு அளிப்பதை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்று நிருணயம் செய்திருக்கிறது. மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வி வேண்டும் என்பதை முன்கூட்டியே தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பதையும் அங்கீகரிக்கிறது.
(ஆ) கல்வியில் வேறுபாடு காட்டப்படுவதற்கு எதிரான யுனெஸ்கோவின் சாசனம் (விதி 5 (1) (b): பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களை எவ்வித இடையூறுமின்றி தேர்வு செய்யும், மற்றும் அவர்கள் விருப்பத்திற்கிணங்க தங்களின் குழந்தைகளின் சமய மற்றும் நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும், உரிமையை அங்கீகரிக்கிறது.
(இ) பொதுவான மொழி உரிமைப் பிரகடனம்: இப்பிரகடனம் மொழி சமூகங்கள் அடிப்படையில் முழுமையான மனித சமுதாயம் நிலையான, நியாயமான வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது. இதன் காரணங்களுக்காக இப்பிரகடனம் மரியாதை, நல்லுறவு மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பன்மொழி வளர்ச்சிக்கு ஓர் அரசியல் அமைப்பு உருவாக ஊக்கமளிக்கிறது.
3. எங்களுடையத் தீர்மானங்கள்
3.1 மலேசியா முன்நோக்கிச் செல்ல பல்லினமொழி, பல்லினப் பண்பாடு, பல மதங்கள் ஆகியவற்றின் பலத்தை அடிப்படையாகக் கொண்ட வேற்றுமையில் உருவான சமூகமே சரியான வழியாகும்.
மலேசியாவில் தாய்மொழிக்கல்வி 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றது. இக்கல்வி முறையானது தேசியக் கல்வியோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சுதந்தரம் பெற்று 50 ஆண்டுகளாகியிருக்கும் மலேசியா சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நாம் விருத்தி செய்த கல்விமுறை இந்த முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்நாட்டில் தாய்மொழிக்கல்வி, மூவினங்களும் மரியாதையுடனும் தன்மானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழவழி வகுத்திருக்கின்றது. இதன்வழி ஓரினம் ஒதுக்கப்படுதல், ஒடுக்கப்படுதல் போன்ற தேவையற்ற நடைமுறையைத் தவிர்த்து இன ஒற்றுமையையும் வளர்த்துள்ளது. எனவே அரசாங்கம் தாய்மொழிக்கல்வி இங்கு நிலைத்துவிட்டதை ஏற்றுக்கொண்டு அதன் வளர்ச்சியை உறுதி செய்து, அதன் வளர்ச்சிக்காகப் பல்வேறு சமூகத்தினரின் தேவைக்கேற்ப திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டும்.
3.2 அரசாங்கம் எல்லா குழந்தைகளும் தாய்மொழி வழியாகக் கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும். இந்த உரிமையை அரசாங்கம் மதித்து, மேம்படுத்தி நிலைநாட்ட வேண்டும்.
தொடக்கப்பள்ளியில் தாய்மொழிக் கல்வித் திட்டமானது தேசிய மொழி கல்வித் திட்டத்துள் இணைந்து அரசாங்கத்தின் பார்வையின் கீழ் வந்துள்ளது. அரசாங்கம் தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத சூழலில் இப்பள்ளிகள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.
3.3 சீன, தமிழ்மொழிக் கல்வி ஒற்றுமை, நிலைத்தன்மை, அமைதிக்கு வித்திடும் என்பதனால் அரசாங்கம் இக்கல்விக்கு மதிப்பளிக்க வேண்டும்.
காலனித்துவ ஆட்சியில் இங்குத் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின. பெருமளவில் 1900-களில் வந்த தொழிலாளர்களுக்காக ஆங்கில அரசு 1912இல் தொழிலாளர் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் வழி தோட்டத் தொழிலாளர் குழந்தைகளுக்காகத் தோட்ட நிருவாகம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதற்கு வழி வகுத்தது.
1930இல் 333-ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகள் 1938இல் 547 ஆக அதிகரித்து 1947இல் 741ஆகவும் 1957இல் அதிகபட்சமாக 888 தமிழ்ப்பள்ளிகளும் பிறகு ஏற்பட்ட அரசியல் கல்வி மாற்றங்களினால் 1963இல் 720 ஆக குறைந்து, 1969ல் 662 ஆகவும், 1973இல் 631 ஆகவும், 1983இல் 575 ஆகவும், 1993இல் 541 ஆகவும், 1998இல் 530 ஆகவும், 2000இல் 526 ஆகவும், 2006இல் 523 ஆகவும் குறைந்துவிட்டன. தமிழ் சமூகத்தின் வளர்ச்சியும் மலேசியாவிலுள்ள மற்ற சமூகத்தினருடன் அவர்கள் இணைந்து ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் வாழ்ந்துவருவது அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீட்சிக்குச் சான்றாகும். தமிழ்க்கல்வி அமைவு அவர்களுக்கு மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது உடைமையுணர்வைத் தருகிறது.
சீனப்பள்ளிகளும் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உருவாகின. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன மக்களின் பெருகிவரும் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1921இல் இருந்து 1939க்கிடையில் 252லிருந்து 1015 ஆகவும் 1957இல் 1333 ஆகவும் அதிகரித்தது. 2007இல் 1287 அரசாங்க உதவிபெற்ற சீனத் தொடக்கப்பள்ளிகளும் 60 தனியார் சுதந்தர இடைநிலைப்பள்ளிகளும் மேண்டரின் மொழியைப் போதனை மொழியாக் கொண்ட மூன்று தனியார் உயர்நிலைப்பள்ளுகளும் இருக்கின்றன. கடும் உழைப்பின் வழி சீனச் சமூகம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது. ஒரு நாடு என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்கிறோம். சீனமொழியும் பண்பாடும் வேற்றுமையின் பலமாகும்.
3.4 தமிழ்ப்பள்ளிகள் கண்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு, அரசாங்கம் இப்பள்ளிகளுக்கு உரிய மதிப்பினை அளித்து, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் கல்வி அமைவில் மிகப் பலவீனமான ஒன்று என்று கருதப்பட்ட தமிழ்ப்பள்ளி அமைவு இப்போது பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. யு.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினைப் பெற்று வருகிறார்கள். குறிப்பாக மலாய் மொழிக்கட்டுரை தேர்ச்சியில் 1998இல் 32 விழுக்காட்டிலிருந்து 2004இல் 56.3 விழுக்காடு உயர்வு கண்டுள்ளனர். அவர்களின் வளர்ச்சியைக் காட்சிக்குறிப்பு 1 இல் காணலாம்.
காட்சிக்குறிப்பு 1: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் – மற்றப் பள்ளிகளுடன் ஒப்பீடு.
காட்சிக்குறிப்பு 2: ஒப்பீட்டு தேர்ச்சி விகிதம் 1998-2004
யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. காட்சிக்குறிப்பு 3இல் எல்லா பாடங்களிலும் ‘A’ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. 1999இல் 45 பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் ‘A’ பெற்ற நிலையில் இது தொடர்ச்சியாக அதிகரித்து 2006இல் 570 பேர் அதே நிலையினை அடைந்துள்ளனர்.
காட்சிக்குறிப்பு 3: யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7A எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை 1999-2006.
ஆய்வுகள் தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கிறது. இதனை யுனெஸ்கோ நிறுவனம் 1997இல் உலக வங்கிக்கு மேற்கொண்ட ஆய்வில் மிக முக்கியக் கருத்தாக இவ்வாறு கூறியுள்ளது. ஒரு மாணவன் பிறமொழியைக் கற்பதற்கான வாய்ப்பைத் தாய்மொழியின் பயன்பாட்டை வைத்துத்தான் செய்ய முடியும். ஏனெனில் பிறமொழியைக் கற்பதற்கு முன்பு அதனை எழுதவோ படிக்கவோ தாய்மொழியைப் பயன்படுத்தித்தான் ஒரு மாணவனுக்குக் கற்றுத் தர இயலும். யுனெஸ்கோ (Unesco) Unicef Staff Working Paper, New York) வெளியிட்ட Education For All: policy lesson from High-Achieving Countries (அனைவருக்குமான கல்வி அதனை நல்லதொரு திட்டத்தின் வழி செயலாக்கம் செய்யும் நாடுகள் எனும் ஆய்வில் எடுத்த கருத்துக்கள் கீழ்கண்டவாறு:
கல்விக் கற்காத பெற்றோர்களைக் கொண்ட பிள்ளைகளிடம் தாய்மொழி இல்லாமல் பிறமொழியைக் கொண்டு பள்ளியில் பாடம் போதிக்கும்போது அம்மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அந்த ஆய்வில் மேலும் குறிப்பிட்ட செய்தி என்னவென்றால் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைவது தாய்மொழிதான். இந்த மாணவர்கள் தங்களது தொடக்கக் கல்வியைக் தாய்மொழிப் பள்ளியில் பயில்வதால்தான் என்பது மிகத் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் கற்பிற்கும்போது ஒரு மாணவன் மிக விரைவாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெறுகிறான் என்பதை மேலும் பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பிறமொழி மாணவர்களைவிட மிக விரைவாகக் கற்கும் ஆற்றலையும் கொண்டுள்ளனர் என்பதை நிருபித்துள்ளது.
2003ஆம் ஆண்டு நமது அரசாங்கம் கணித அறிவியல் பாடங்களின் பயிற்சி மொழியாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்குக் கெடுதியை விளைவிக்கிறது தொடக்கப்பள்ளி மிக முக்கியமானது. வசதியற்ற நிலையிலுள்ளவர்களின் குழந்தைகளுக்கு அதைத்தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது. கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கை இக்குழந்தைகள் கல்வி கற்பதற்கான சாத்தியத்தை குலைத்துவிடுவதோடு அவர்களின் வறுமையை மேலும் கடினமாக்குகிறது.
பெரும்பாலான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். 1993இல் 104,638ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 2000இல் 90,280ஆக குறைந்தது. இதற்குக் காரணம் நிறையப் பள்ளிகள் மூடப்பட்டதேயாகும். ஏறக்குறைய 15,000 மாணவர்கள் தொடக்கப்பள்ளிக்குச் செல்லாமலேயே இருக்கின்றனர்.
4. சூம்பிப்போய்க் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள். இதுதான் பரிவுள்ள சமுதாயமா?
மலேசிய இந்தியர் காங்கிரஸ் 2000 மற்றும் 2004இல் அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்த மகஜரை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
4.1 2006இல் மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றில் 376 (72%) பகுதி உதவிபெறும் பள்ளிகளாகும். அவை அடிப்படை வசதியற்று இருக்கின்றன.
4.2 523 பள்ளிகளில் 129 பள்ளிகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளன.
4.3 பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை தேவைகளான நாற்காலி, மேசை, அலமாரி போன்றவை சரிவரக் கிடைப்பதில்லை.
4.4 தமிழ்ப்பள்ளிகளுக்கு இன்னும் 750 பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
4.5 தொடக்கப்பள்ளிகளில் பாலர்பள்ளி அமைக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் தமிழ்ப்பள்ளிகள் ஓரங்கட்டப்பட்டு விட்டன. 2004இல் இருந்த 1500 புதிய பாலர் பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 10 மட்டுமே கட்டப்பட்டன.
4.6 தோட்டத் தொழிலாளர்கள், மேம்பாட்டினால் பெருமளவில் நகர்ப்புறங்களுக்கு இடம்மாறிச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப நினைக்கின்றனர்; ஆனால் இந்த இடங்களில் புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படுவதில்லை.
4.7 தமிழ்ப்பள்ளிகளில் பதிவு தொடர்ந்து அதிகரிப்பதினால் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. அரசாங்கம் இப்பள்ளிகளில் புதிய வகுப்பறைகளைக் கட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை.
4.8 தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்திக் கொள்ளப் பயிற்சிகள் மிகக் குறைவு.
4.9 கல்வி அமைச்சில் தமிழ்மொழி சார்ந்த அதிகாரிகள் மிகக்குறைவு. இது ஆய்வு, மேம்பாடு, நிருவாகம் முதலிய துறைகளிலும், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் குறைவாகவே காணப்படுகிறது.
4.10 தமிழ்ப்பள்ளியில் படிக்கும் தமிழ்மாணவர்களுக்கு நேரடியாக உதவிகள் கிடைப்பதில்லை.
5. எங்களுடைய கோரிக்கைகள்
மேற்கூறியுள்ள காரணங்களுக்காக, இங்கு, இன்று 29.03.2007இல் குழுமியிருக்கும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் நாங்கள் கீழே தரப்பட்டுள்ள எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தமிழ்ப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்; சரியான கொள்கைகளை வகுக்க வேண்டும், மற்றும் இவற்றைக் கண்காணிப்பதற்கு வேண்டிய அமைப்புகளை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை:
5.1 பகுதி உதவிபெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் அரசாங்கப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும்.
5.2 பாழடைந்து இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் உடனடியாகப் பழுதுபார்க்கப்பட வேண்டும்.
5.3 இட நெருக்கடியில் மூழ்கியுள்ள தமிழ்ப்பள்ளிகளில் இருக்கும் கட்டடங்களை மேம்படுத்துவதுடன் புதிய கட்டடங்களைக் கட்ட வேண்டும்.
5.4 தமிழர்கள் அதிகமாக வாழும் நகர்ப்புறங்களில் அம்மக்களின் விருப்பத்திற்கிணங்க புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
தமிழ்க்கல்வியின் மேம்பாட்டிற்குத் தேவையான மனிதவளத்தை வளர்க்க உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.5 தமிழ்ப்பள்ளிகளின் தேவைக்கு ஏற்ற அளவிற்கு ஆசிரியர்களைச் சேர்த்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.
5.6 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கல்விப் போதனைப் பட்டப்படிப்பு, மற்றும் பட்டம் பெற்ற, பட்டம் பெறாதவர்களுக்குப் பள்ளியிலேயே ஆசிரியர் பயிற்சிகளை வழங்குவது போன்ற பல்வேறு பயிற்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்.
5.7 கல்வி அமைச்சின் எல்லா நிலைகளிலும் தமிழ்மொழியில் நிபுணத்துவம் பெற்ற தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். (இது சீன மொழிக் கல்விக்கும் பொருந்தும்)
கொள்கை மற்றும் செயல்பாடு
5.8 மீண்டும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில் போதிக்க வேண்டும்.
5.9 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகள் அன்றாடம் எதிர்கொள்ளும் உணவு, போக்குவரத்து வசதிகள் மற்றும் புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்வதற்கு ஒரு வழிமுறையினை உடனடியாகக் காணப்பட வேண்டும்.
5.10 இன்றையத் தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த தரம், தகுதி மற்றும் அவற்றின் நிதி, கல்வி, மனிதவளங்கள் ஆகியவற்றைக் கண்கூடாகக் கண்டு அளவிடவும் மேற்கூறியுள்ள பிரச்சனைகளைக் களைவதற்கும் ஏற்ற வழிமுறைகளை முன்மொழிவதற்கும் அரசாங்கத் தரப்பினரையும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களையும் கொண்ட ஓர் “அரசாங்கம் – மக்கள்” குழுவை நிறுவ வேண்டும்.
கிடைக்கப்பெறும் நன்மைகள்
பல்லின, பன்மொழி, பலகலாச்சாரங்களைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் கொள்கையைக் கொண்டு அதனை அமல்படுத்தும் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் அரசியல் பலாபலன்கள் ஏராளமாக இருக்கும் என்பதுடன் நீண்டகாலப் பலன்களைக் கொண்டிருக்கும்.
மேலும், அவ்வாறான தேசியச் சமுதாயம் நமது அண்டை நாடுகளான, பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும், இந்தியா மற்றும் சீன போன்ற நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவதுடன் நமது மலேசிய மக்களுக்குப் பெரும் பொருளாதார நன்மைகளைக் கொண்டு வரும்.