கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்திருந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 2 கிமீ சுற்றளவு பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மேலும் 5 கிமீ சுற்றளவுக்கு விரிவுபடுத்தி கலெக்டர் செல்வராஜ் உத்தரவிட்டார். மேலும் அங்கு நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். எஸ்பி விஜயேந்திர பிதரி தலைமையில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. இந்த தகவல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு தெரிய வந்தது. போலீசார் உள்ளே நுழைந்து விடுவார்கள் என அவர்கள் கருதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயில் மணி அடிக்கப்பட்டு ஆங்காங்கே இருந்தவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களை உதயகுமார் சமாதானப்படுத்தினார்.
மேலும் அடுத்த கட்டம் குறித்து சமுதாய தலைவர்களுடன் நாளை (இன்று) ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி இன்று காலை 11 மணி முதல் சமுதாய தலைவர்களுடன் உதயகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் இடிந்தகரையில் இன்று (10-ம்தேதி) 10-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களான உவரி, கூட்டப்புளி, கூடுதாழை, தோமையர்புரம், பெருமணல், கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. இந்த சம்பவங்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.