கூடங்குளம் அணு உலை அழுத்த கலன் திறப்பு

கூடங்குளம் முதல் அணு உலையில் அழுத்த கலன் நேற்று திறக்கப்பட்டது. இதற்காக குரேஷியா, ஜெர்மன் வல்லுனர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். விரைவில் மின் உற்பத்தியை துவங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலையின் மூலம் அடுத்த மாதம் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக முதல் அணு உலையில் நிரப்பப்பட்டுள்ள மாதிரி எரிபொருளை அகற்றுவதற்கு இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியை எதிர்பார்த்து கூடங்குளம் அணு மின் நிலையம் காத்திருந்தது. கடந்த 10ம் தேதி முதல் அணு உலையின் அழுத்த கலனை திறக்கவும், மாதிரி எரிபொருளை அகற்றவும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து முதல் அணு உலையின் அழுத்த கலனை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தன. இதற்காக குரேஷியாவில் இருந்து 15 பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் கூடங்குளம் வந்தனர். முதல் அணு உலையின் அழுத்த கலன் மூடி 54 போல்ட்டுகளை கொண்டு மூடப்பட்டிருந்தது.

ஜெர்மனில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர்கள் மற்றும் நவீன இயந்திரம் மூலம் இந்த போல்டுகள் அகற்றப்பட்டு அணு உலை அழுத்த கலனின் மூடி நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அணு உலையில் நிரப்பப்பட்டுள்ள மாதிரி எரிபொருளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணி ஓரிரு நாட்கள் தொடர்ந்து நடக்கும்.

பின்னர் அணு உலை யில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு கூடங்குளம் அணு மின் நிலையம் விண்ணப்பிக்கும். இதற்கான அனுமதி கிடைத்தவுடன் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும். யுரேனியம் எரி பொருள் நிரப்பிய பின்னர் முதல் அணு உலையின் மூலம் மின் உற்பத்தி தொடங்கும்.

தமிழகத்தில் தற்போது கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் பொதுமக்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் கூடங்குளம் அணு மின் நிலைய மின்சாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இந்த அனுமின் நிலையத்தால் அருகேயுள்ள கிராமங்களுக்கு ஆபத்து எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.