நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமா’ அரங்கம்!

பாரிசானின் இப்போதைய நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமாஅரங்கமாக’ இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களின் அந்தக் கனவு சினிமா அரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு: “அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றிபெறுவது எப்படி”.

பாரிசானின் அடுத்த பொதுத் தேர்தல் வெற்றியை நோக்கித்தான் அவர்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்களுக்கு இந்திய, சீன ஓட்டுக்கள் தேவை. அதற்காக, இந்தியர்களுக்கு
சில எலும்புத் துண்டுகளை அவ்வப்போது தூக்கி எறிகிறார்கள். அவற்றில் சில:

அ. அடையாள அட்டை மற்றும் குடியுரிமை தருவது; (இவ்வளவுநாள் ஏன் அவர்கள் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மட்டும் ஏன் இந்த கரிசனம்? – அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பின் மீண்டும் பழைய குருடி கதவத்திறடி கதைதானே?)

ஆ. பொதுச்சேவை இலாகா உபகாரச் சம்பளம் 10% இந்தியர்கள்; (இது வெறும் கண் துடைப்பு, உண்மையில் எவ்வளவு கிடைத்தது என்பதற்கான புள்ளிவிபரம் ஏதும் இல்லை.)

இ. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கு ரிம 340 மில்லியன்; (இது எப்படி எதற்காக எப்போது தரப்படும் என்பதற்கான முறையான ஆதாரங்கள், அறிவிப்புக்கள் இல்லை)

ஈ. புதிய 6 தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும். (அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள்; பிறகு கட்டப்படும் என்பார்கள், வெற்றிபெற்றுவிட்டால் 6 பள்ளிகள் என்ன 60 பள்ளிகளை மூடுவார்கள். அதற்கு ஆயிரம் காரணம் சொல்வார்கள்)

உ. இந்த 180 மில்லியன் நிதியுதவி. (இந்த நிதிஉதவி கிடைக்கும் போது பார்க்கலாம். அதுவரை இதுவும் கனவே. அப்படியே கிடைத்தாலும் அது கடனாகவே தரப்படும். மீண்டும் ஒரு கடன்கார சந்ததி உருவாகும்)

ஊ. 1559 மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்கள்.
(முதலில் முன்பு அறிவித்த 559 இடங்கள் வழங்கப்படுகிறதா எப்போது முழுமையாக வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துங்கள், புதிய 1000பற்றி பிறகு பேசலாம்.)

பாரிசான் அரசு இனியும் நமக்கு வேண்டாம் என்பதற்கு 1000 காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இப்போது அதைப்பற்றி நாம் பேச வேண்டாம். இப்போது நம் முன்னே நிற்பது ‘அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்’ என்பதுதான்.

நாம் நினைத்தால் அது முடியும். எதிர்க்கட்சி கூட்டரசு அரசாங்கத்தை அமைத்தால் நமக்கு பல அனுகூலங்கள் உண்டு:.

அ. நமக்குத் தேவையான பல நன்மைகள் நாம் கேட்காமலே கிடைக்கும்;
(அதற்கடுத்த தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டுமே)

ஆ. அப்படியே தேசிய முன்னேற்றத்தில் இருந்து நாம் விடுபட நேர்ந்தால், நமது தலைவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
(வாராது வந்த தேர்தல் வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே படுபடுவார்கள்)

இ. தலைவர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள்
(கொள்ளையடிக்க நேர்ந்தால் பிற இனத்தலைவர்கள் விட்டுவிட மாட்டார்கள்.)

இவை எல்லாவற்றையும் விட அன்வார் கூறியுள்ளது போல,

அ. டோல் கட்டணம் குறைக்கப்படுவதும் அகற்றப்படுவதும் நமக்கும் நன்மையே.

ஆ. பல்கலக்கழகம்வரை இலவச கல்வியால் நமக்கும் பலனே

இ. பெட்ரோல் விலைக் குறைப்பால் நமக்கும் நன்மையே

எல்லாவற்றுக்கும் மேலாக, நஜிப்;

அ. டோல் கட்டணம் குறைக்க முடியாது

ஆ. PTPTN கடன் அகற்றமுடியாது

இ. பெட்ரோல் விலைக் குறைப்பு சாத்தியம் இல்லை

என்று எல்லாமே முடியாது, முடியாது, முடியாது என்கிறார் நஜிப்.
அன்வாரோ முடியும், முடியும், முடியும் என்கிறார்.

முடியாது என்பவனைவிட முடியும், முயற்சிக்கிறேன் என்பவனே அறிவாளி; சிறந்தவன் ஒப்புகொள்கிறீர்களா? சிந்தியுங்கள்..!

-நல்லவன்