புதுடில்லி: டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. நேற்று ஒரே நாளில் ஏராளமான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்திய மத்திய பிரதேசத்தில், குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளம்பெண் கழிப்பறைக்கு சென்ற போது, மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டார்.
டில்லி அருகே உள்ள பைசாபாத் நகரில் காரில் கடத்தப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த மைனர் பெண், டில்லி கொண்டு செல்லப்பட்டு நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு உள்ளார். அந்த சிறுமியை, சாலையோரம் வீசி மறைந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் குல்பர்கா மாவட்டத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 11 வயது சிறுமியை மர்ம நபர் கற்பழித்துள்ளார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு நகரில், வீட்டில் இருந்த 18 வயது பெண்ணை பேருந்து ஓட்டுனர் ஒருவரும் அவரின் நண்பரும் தூக்கி சென்று கற்பழித்துள்ளனர்.
மும்பையில், பாந்த்ரா கல்லூரி ஒன்றில் படித்து வந்த 19 வயது மாணவியை அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன், கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். காதலிக்க மறுத்த அந்த மாணவியை, பல இடங்களில் குத்தி கொன்ற மாணவன் சம்பவ நாளிலேயே தற்கொலை செய்து கொண்டான்.
நேற்று மட்டுமல்ல, அண்மைக் காலமாகவே, இந்தியா முழுவதும் இதுபோன்ற பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை விதிக்கப்படாத வரை, பெண்கள், குழந்தைகள் இத்தகைய கொடுமைகளில் இருந்து தப்பிக்க முடியாது என பொது நல விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.