ஒப்பா காங்ணாத்தில் ஆப்பு அடிச்சிட்டாங்களே முருகா!

najib gangnam styleமுருகா வேறு வழியே இல்லை. நான் நேரா உன்னைப் பார்த்து முறையிட ஆறுபடை வீட்டுக்கும் ஓர் அவசர பயணம் வரலாம் என நினைக்கிறேன். எங்க நாட்டுப் பிரதமர் அவ்வளவு குழம்பி போயிருக்கிறார் முருகா.

மலேசிய வரலாற்றில  நஜீப் போல ஓர் அறிவு ஜீவிதமான பிரதமரை நான் கண்டதில்ல. இதை நான் சொன்னா எதிர்க்கட்சியினர் கோபம் அடைவார்கள் எனத் தெரியும் முருகா. அவர்களுக்கு வேறென்ன தெரியும். ஏழைக் குடும்ப மாணவர்களுக்குப் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டில்  உதவியாக இருக்கும் பொருட்டு 500 மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் ஈஜோக்கில் 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்ட  ஏற்பாடுகள் செய்ய மட்டும் தெரியும்.

தேவையா முருகா அதெல்லாம் எங்களுக்கு…

ஆனால் எங்க பிரதமரோ… 50 மில்லியன் செலவுல ஒற்றுமை பொங்கல் அல்லவா வைத்தார். எங்களுக்கு ஏழை மாணவர்களுக்கான விடுதி முக்கியமா அல்லது பொங்கல் முக்கியமா?  நிச்சயம் பொங்கல்தானே முருகா. ஆனால் பொங்கியது பொங்கல் அல்ல ‘அல்வா’ எனச் சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொல்லட்டும் முருகா. எங்களுக்குக்  கேளிக்கைதான் முக்கியம் என உனக்குத்தானே தெரியும்.

கேளிக்கைக்காக  எத்தனை மில்லியன் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். யார் அப்பன் வீட்டு காசை செலவு செய்ய யார் கேள்வி கேட்பது.

ஆனா, முருகா… இப்போது நான் சொல்ல வந்தது வேறு விசயம். நம்ம பிரதமர் இந்தியர்களைப் போல சீனர்களையும் தவறா நினைச்சிட்டாரு…

தமிழ்த் திரைப்படங்களில் எல்லாம் ஹீரோகள் ‘டூப்’ போட்டுக்கொண்டுதான் சாகசங்கள் செய்வார்கள். எனவே நாங்கள் ‘டூப்’புகளை நன்கு ரசிப்போம். அவர்கள் பறந்து பறந்து போடும் சண்டை மற்றும் சாகசத்தைப் பார்த்தெல்லாம் திரையரங்கில் கைத்தட்டுவோம்.

ஆனால் சீனர்கள் அப்படியா?

புரூஸ்லிக்கு உண்மையிலேயே குங்ஃபூ தெரியுமாம், ஜெக்கி சான் ‘டூப்’ போடாமல் சாகசங்கள் செய்பவர். அப்படி இருக்க அவர்களிடம் ‘டூப்’ விட்டால் ரசிக்கவே மாட்டார்கள். இதுக்கூட தெரியாமல் எங்க பிரதமர் தமிழ்ப்பட பாணியில்  சீனர்கள்கிட்ட கலர் கலரா ரீல் விட்டு இப்படியா கண்ணாப்பின்னான்னு மாட்டிக்கனும்.

கொஞ்ச நேரத்துக்கு முன்தான் அந்த அசம்பாவிதத்தை யூ- டியூப்பில் பார்த்தேன் முருகா. மனம் பதபதைத்தது.  முப்பதாயிரம்  பேர் கூடியுள்ள அரங்கில் “ Psy-க்கு தயாரா ?” என  மூன்று முறை வினவிய போது கூட்டத்தினர் ‘ஆமாம்’ எனப் பதில் அளித்தனர். அதே பாணியில் அடுத்தக் கேள்விக்கும் ‘ஆம்’ சொல்வார்கள் என நம்ம பிரதமர் நான்காவது முறை ‘பி.என் -னுக்கு தயாரா?’ எனக் கேட்டபோது ‘இல்லை’ எனக் ஒருமித்தக் குரலில் கூச்சலிட்டது தண்ணீர்மலை குன்றின் மேல் குடிகொண்டிருக்கும் உனக்குக் கூடக் கேட்டிருக்கும். (VIDEO)

அந்த நிமிடம் நீ எவ்வளவு அதிர்ந்திருப்பாய் என என்னால் உணர முடிகிறது. என்னதான் இருந்தாலும் நான் உன் பக்தன் அல்லவா?

சீனப்பெருநாளுக்காக , சீனர்களை  குஷிப்படுத்த ஒன்றரை மில்லியன் செலவு செய்து Psy யைத் தென்கொரியாவிலிருந்து அழைத்து வந்து இந்த மக்களை ‘ஒப்பா  பாணியில் ஆடவிட்டு ‘ அப்படியே ஓட்டை வாங்கிவிடலாம் என நம்ம பிரதமர் போட்டத்திட்டம் இப்படிப் பாலாகிவிட்டதே.

நம்ம ஒற்றுமை பொங்கலுக்கு வந்த எம் மக்களாவது ஓசியில் உல்லாசப் பயணம் வந்து உன்னையும் பத்துமலையில் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு போனார்கள். ‘ஒப்பா காங்ணாம் ‘ பார்க்க வந்தவர்களோ இப்படி ‘ஆப்பா’ வைத்துவிட்டார்களே.

சரி… நடந்தது நடந்துவிட்டது. இனி நீதான் பிரதமருக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் முருகா. ஒரே ஒரு முறை சந்திரமுகியில நடிச்ச நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துகிட்ட  கொஞ்சம் சொல்லி மலேசியா பக்கம் வந்து, நம்ம பிரதமருக்கு ஆதரவா பிரசாரம் செய்யச் சொல்லு. அவரு ஏதாவது பஞ்ச்சு டயலாக்கெல்லாம் விட்டு பேசட்டும்.

ஆனா… தப்பித் தவறிக்கூட உன் சக்தியால பிரபுவையும் சேர்த்து கூட்டி வந்துறாத. பிரதமர், தோற்ற கவலையில இருக்கும் போது , அவரக் கடுப்பேத்துற மாதிரி, “என்ன கொடும சார் இது” ன்னு தலையில் அடிச்சி அழுதுகிட்டு இருக்கப்போறாரு….

-முருக பக்தன்

வேண்டுதல் தொடரும்….