“ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டுப்போடும் போராட்டம் செய்வதாக திட்டமிட்டு காலை பத்து மணிக்கு நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பேரணியாக திரண்டு கரவொலியை முழங்கி வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வந்தனர்.
ஏற்கனவே மாணவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என முடிவு செய்திருந்த காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை குவித்திருந்தனர்.
அஞ்சலகத்திற்கு முன்பே இரும்பு தடுப்புகளை வைத்து காவல்துறையினரை வரிசையாக நிறுத்தி 50 அடிக்கு முன்பே மாணவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். மாணவர்களோ காவல்துறையினரை அத்துமீறி பூட்டுப்போட நுழையும் போது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.