முதல் குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங்தான்! பி.சி.பரேக்

pm_parakhநிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்நோக்கியுள்ள பி.சி.பரேக், ஹைதராபாதில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கவில்லை. அப்படி நடந்ததாகக் கருதினால், அதில் பலரும் ஈடுபட்டுள்ளனர். குமார்மங்கலம் பிர்லா ஒரு சதியாளர். இந்த விவகாரத்தை ஆராய்ந்து, பரிந்துரை அளித்த நான் ஒரு சதியாளராக இருக்கலாம். நிலக்கரித் துறையைத் தம் வசம் வைத்திருந்தவர் என்ற முறையில் இறுதி முடிவெடுத்த பிரதமர் மூன்றாவது சதியாளர். எனவே, இந்த விவகாரத்தில் சதி நடந்திருந்தால் எங்கள் அனைவரையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாகச் சேர்க்க வேண்டும் என்றார் பி.சி.பரேக்.

அப்போது, வழக்கில் பிரதமரை முதல் சதியாளராகச் சேர்க்க வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்து அவர் கூறியது:

ஆம். பிரதமர்தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுத்தார். நான் அளித்த பரிந்துரையை மறுத்து அவர் செயல்பட்டிருக்க முடியும் என்பதால் அவர்தான் இதற்குப் பொறுப்பு. நிலக்கரித் துறை அமைச்சர் என்ற முறையில் அவருடையதுதான் இறுதிப் பொறுப்பாகும்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் சதி நடைபெற்றது என்று சி.பி.ஐ. கருதினால், அவர்கள் பிர்லாவையும் என்னையும் இதில் தேர்வு செய்து விட்டு, பிரதமரைச் சேர்க்காமல் விட்டது ஏன்? சதி என்பது நடந்திருந்தால் ஒவ்வொருவருமே அதில் தொடர்புடையவர்கள்தான்.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்தது நேர்மையான முடிவாகும். ஹிண்டால்கோவும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் (என்.எல்.சி.) நிலக்கரிச் சுரங்கம் கோரி விண்ணப்பித்திருந்தன.

அப்போது, என்.எல்.சி. என்பது பொதுத்துறை நிறுவனம் என்பதாலும், இந்த ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றது என்பதாலும் அதற்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நிலக்கரித் துறை அமைச்சகத்தின் ஆய்வுக் குழு முடிவு செய்தது.

ஆனால், அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, பிரதமரை பிர்லா சந்தித்தார். அப்போது, “”என்.எல்.சி. போலவே ஹிண்டால்கோவும் தகுதி படைத்தது என்பதாலும் அதுதான் முதலில் விண்ணப்பித்தது என்பதாலும் அதற்கு சுரங்கம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் பிரதமரிடம் கூறினார். பிர்லா கூறியதில் உண்மை இருப்பதாக நான் உணர்ந்தேன்.

எனவே, ஹிண்டால்கோவும் என்எல்சியும் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று நான் ஆலோசனை கூறினேன். எனது அந்தப் பரிந்துரைக்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்.

இந்த விஷயத்தில் பிரதமரின் பெயர் ஏன் நீக்கப்பட்டது என்ற இந்தக் கேள்வியை சி.பி.ஐ.யிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டு விவகாரத்தில், என் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அரசு முடிவில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹிண்டால்கோ மற்றும் என்.எல்.சி.க்கு கூட்டாக சுரங்க ஒதுக்கீடு செய்வது என்று நாங்கள் எடுத்தது சரியான முடிவாகும். இதில் சதி நடைபெற்றதாக சி.பி.ஐ. நினைப்பது ஏன் என்று எனக்குத் தெரியாது.

இந்த வழக்கில் அப்போதைய நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவின் பெயரையும் சிபிஐ சேர்க்க வேண்டும். ஏனெனில் அவர் மூலம்தான் ஆவணங்கள் சென்றடைந்தன.

ஒடிஸாவில் தலாபிரா-2 மற்றும் தலாபிரா-3 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த நெருக்கடியும் வரவில்லை. இந்த ஒதுக்கீடு தொடர்பாக சில எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தது உண்மை.

நேர்மையான மற்றும் சரியான ஒரு முடிவையும், தவறான முடிவையும் வேறுபடுத்திப் பார்க்க சி.பி.ஐ. தவறிவிட்டது. இந்த வழக்கில் அடங்கியுள்ள விவகாரங்களை சிபிஐ புரிந்துகொள்ளவில்லை.

நிலக்கரித் துறை செயலாளர் என்ற முறையில், வெளிப்படையான ஏலம் மற்றும் மின்னணு ஏலமுறை போன்றவற்றைப் பரிந்துரைத்ததன் மூலம் சுரங்க ஒதுக்கீட்டு நடைமுறைகளை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற நான் முயற்சித்தேன். அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சர் சிபு சோரன் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும், அவர் ராஜிநாமா செய்த பிறகு, இந்த யோசனைக்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக அமைச்சரவைக்கு ஒரு குறிப்பைத் தயாரிக்குமாறும் அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

அந்த யோசனையை அமல்படுத்துவதற்காக, சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அவசரச்சட்டம் கொண்டுவர பிரதமர் அலுவகம் எதிர்ப்பு தெரிவித்தது. மாறாக, சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர அது விரும்பியது என்றார் பி.சி.பரேக்.

TAGS: