கேரள நக்ஸல் அமைப்பு மிரட்டல்: கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு

kudamkulamகூடங்குளம் அணு உலையை தகர்க்கப் போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டு முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த நக்ஸல் அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் தமிழக காவல்துறையை கேரள உளவுப் போலீஸார் உஷார்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரளத்தைச் சேர்ந்த நக்ஸல் அமைப்பு விடுத்திருந்த மிரட்டலில் கூடங்குளம் அணு உலையை அக்.16, 17ஆம் தேதிகளில் தகர்க்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்ததாம். இதையடுத்து கூடங்குளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நுழைவு வாயில் மட்டுமல்லாது அணு உலையைச் சுற்றிலும் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலோரக் காவல் படையினரும் உஷார்படுத்தப்பட்டு அணு உலைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலை அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான 2 கப்பல்கள் மூலமும் அணு உலையின் பாதுகாப்பு குறித்த கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த போலீஸாரும் அணு உலைக்குள் வரும் அனைவரையும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றனர். அணு உலையில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிர சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி கூறியது:

குறிப்பிடும்படியான மிரட்டல் ஏதுவும் வரவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாகவும், உஷார் நடவடிக்கையாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஆயுதங்களுடன் 600 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

கூடங்குளம் அணு உலை வளாக திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் கூறுகையில், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அணு உலைக்கு எந்தவிதமான மிரட்டலும் வரவில்லை என்றார்.

நவம்பரில் மின் உற்பத்தி?

கூடங்குளம் அணு உலைகளில் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என 2 மாதங்களாகவே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்நிலையில், நீராவி செல்லும் பாதையில் அழுத்தம் அதிகரித்து அதில் பொருத்தப்பட்டுள்ள வால்வுகளில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தியில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது, வால்வுகள் சரி செய்யும் பணிகள் முடிவடைந்து சோதனை உற்பத்திக்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் நவம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அணு உலை வட்டாரங்கள் தெரிவித்தன.

TAGS: