காங்கிரசை முந்துகிறது பா.ஜ.க. : கருத்துக்கணிப்பில் தகவல்

modi rahulபுதுடில்லி: தனியார் டிவி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், ஆட்சியமைப்பதில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் எனவும் தெரியவந்துள்ளது.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ., குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்கொள்கிறது. பா.ஜ., கூட்டணியில் சிரோண்மணி அகாலிதளம், சிவசேனா, ஆர்.பி.ஐ.,(அத்வாலே), மேகாலாயாவின் என்.சி.பி., மற்றும் அரியானா ஜன்ஹிட் போன்ற கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி, அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் தலைமையில் எதிர்கொள்ளும் என தெரிகிறது. அக்கட்சி கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ், ஆர்.எல்.டி., ஜே.எம்.எம்., முஸ்லீம் லீக், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் கேரளா காங்கிரஸ் ஆகியவை உள்ளன.

இதுதவிர சமாஜ்வாடி, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை அமைக்க இடதுசாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல் உள்ளது. ராஜஸ்தான், டில்லியில் காங்கிரஸ் ஆட்சியும், ம.பி., மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ., ஆட்சியும் நடைபெறுகிறது. மணிப்பூரிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தீவிர முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்து மத்தியில் ஆட்சியை பிடிக்கும் கட்சி குறித்தும், 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் குறித்தும் தனியார் டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 15 வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஆந்திரா, உ.பி., ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் காங்கிரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில், இம்மாநிலங்களில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உ.பி., பீகார் மற்றும் ராஜஸ்தானில் பா.ஜ.,வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், அரையிறுதி என கருதப்படும், ராஜஸ்தான், ம.பி., டில்லி மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும். சத்தீஸ்கரில் மட்டும் அக்கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு 186 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 117 இடங்களும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணிக்கு 259 இடங்களும், பா.ஜ., கூட்டணிக்கு 159 இடங்களும் கிடைத்தன.

அதேநேரத்தில், ஆட்சி அமைப்பதில் அ.தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், திரிணமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி., பி.ஜே.டி., ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ்., கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த கட்சிகள் இணைந்து 240 இடங்கள் வரை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. மாநில கட்சிகள் 38 சதவீத ஓட்டுக்களையும், தே.ஜ., கூட்டணி 35 சதவீத ஓட்டுக்களையும், காங்கிரஸ் கூட்டணி 27 சதவீத ஓட்டுக்களையும் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில், 102 இடங்களையும், பா.ஜ., தனிப்பட்ட முறையில் 162 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், காங்கிரஸ் 206 இடங்களிலும், பா.ஜ., 116 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Click Here
TAGS: