அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி என்பவரும், கப்பலின் கேப்டன் டட்னிக் வாலன்டைனும் கப்பலிலேயே இருந்தனர். பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி சனிக்கிழமை பிற்பகலில் கப்பலில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாராம். கப்பலில் காவலில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து மீட்டனர்.
பின்னர், அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தலைமைப் பொறியாளர் தற்கொலைக்கு முயன்றதால் அவருக்கு துறைமுக மருத்துவனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதியளித்த பின்னர், இருவரையும் முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
பின்னர், மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள குற்றவியல் நீதித் துறை நடுவர் (பொறுப்பு) அகிலாதேவி வீட்டில் அவர் முன் ஆஜர்படுத்தினர். தற்கொலைக்கு முயன்ற தலைமைப் பொறியாளரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பிறகு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், பொறியாளரும், கப்பல் கேப்டனும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
டீசல் விற்பனை: 6 பேரிடம் விசாரணை
தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பலுக்கு டீசல் விற்பனை செய்ததாக 6 பேரை பிடித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல், மீனவர்களிடம் திருட்டுத்தனமாக 1500 லிட்டர் டீசல் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், டீசல் விற்றது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த மரிய அன்டன் விஜய், அவரது உதவியாளர் முருகேசன், விசைப்படகு ஓட்டுநர் திரேஸ்புரத்தைச் சேர்ந்த செல்லம், சென்னையைச் சேர்ந்த முகவர் தேவன், உள்ளூரில் டீசல் வாங்கிய ரஞ்சித்குமார், விஜய் ஆகிய 6 பேரையும் க்யூ பிரிவு போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.