கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இப்போது மேற்கொண்டுள்ள ரஷிய சுற்றுப்பயணத்தின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று தில்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய – ரஷியா கூட்டுறவுத் திட்டத்தின்படி கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, புதிதாக 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைக்க இரு நாடுகளும் உத்தேசித்துள்ளன.
ஆனால், இந்தியாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள அணு உலை இழப்பீட்டுச் சட்ட வரம்பின் கீழ் இத்திட்டத்தைக் கொண்டுவருவதை ரஷியா எதிர்த்து வருகிறது. இத்திட்டம் இரு நாட்டு அரசுகளின் ஒப்பந்தத்தின் கீழ்தான் வரவேண்டும் என்று அந்நாடு வலியுறுத்து வருகிறது.
இதனால், இந்த விவகாரத்தில் ரஷியாவின் கவலைகளைப் போக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. “அணு உலை விபத்து ஏற்படும்பட்சத்தில் அதற்கு சாதனங்களில் ஏற்படும் கோளாறுதான் காரணம் என்றால் சம்பந்தப்பட்ட சாதனத்தை சப்ளை செய்த (ரஷிய) நிறுவனம்தான் இழப்பீடு வழங்க வேண்டும். ரஷிய அரசு இழப்பீடு வழங்கத் தேவையில்லை’ என்ற அம்சத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
மேலும், ரஷிய நிறுவனங்களுக்கான விபத்துக் காப்பீட்டின் அளவு மற்றும் மாதாந்திர பிரீமியம் போன்ற அம்சங்கள் குறித்த செயல்திட்டத்தை உருவாக்கித் தருமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனை (ஜி.ஐ.சி.) மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து, இந்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
கூடங்குளத்தில் ரஷியாவின் சாதனங்களைக் கொண்டு 3 மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இன்னும் ஒரே ஒரு அம்சம் மட்டும் பாக்கி உள்ளது. இழப்பீடு குறித்த அம்சம்தான் அது. மற்ற விவகாரங்கள் அனைத்தையும் முடித்து விட்டோம்.
இரு நாட்டு வழக்குரைஞர்களும் இழப்பீடு தொடர்பான அம்சம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதை முடித்துவிட்டு எங்களிடம் தகவல் தெரிவிப்பார்கள் என்று காத்திருக்கிறோம்.
எப்படி இருந்தாலும், இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ரஷிய அதிபர் புதினுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாது. ஏனெனில், இது இந்திய அணுசக்தி நிறுவனத்துக்கும் (என்.பி.சி.ஐ.எல்.) ரஷியாவின் ரோசாடோம் நிறுவனத்துக்கும் இடையில் கையெழுத்தாக வேண்டிய வர்த்தக ஒப்பந்தமாகும்.
கூடங்குளத்தில் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இரு நாட்டு அரசுகளிடையே இழப்பீடு என்ற ஓர் அம்சம் தவிர அனைத்து அம்சங்களிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இழப்பீடு தொடர்பாக வழக்குரைஞர்கள் விவாதித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் கையெழுத்திட வேண்டியுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், கூடங்குளத்தில் புதிய அணு உலைகளை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரஷிய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக அந்நாட்டு ஊடகங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், “”கூடங்குளத்தில் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இரு நாட்டு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் இறுதிசெய்யப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இரு தரப்பு உறவுகள்: இரு நாட்டு உறவுகள் குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், “”ஹைட்ரோகார்பன் துறை உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையெழுத்தாகக் கூடும்” என்று தெரிவித்தன.
முன்னதாக, ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் திங்கள்கிழமை (அக்டோபர் 21) மாஸ்கோவில் நடைபெறும் 14ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் கலந்து கொள்கிறார்.
பாதுகாப்பு, அணுசக்தி, வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் போன்ற பிற விஷயங்களில் இரு தரப்பு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவாக விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கௌரவ டாக்டர் பட்டம்: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் மதிய விருந்து அளிக்கிறார். அதன் பிறகு, மாலையில் மாஸ்கோ மாநில சர்வதேச பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.