புதுடில்லி: நாட்டில் செயல்படும் எக்ஸ்-ரே நிலையங்களில், 91 சதவீதம் முறையாக பதிவு பெறாமல் செயல்படுகின்றன என, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
நாட்டில் மருத்துவ ரீதியாக செயல்படும், எக்ஸ்ரே நிலையங்கள், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெறவேண்டும். இந்த வாரியம் தான், நாட்டிலுள்ள எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகிறது.
இந்த வாரியத்தின் செயல்பாடு குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, ஆய்வு செய்து அறிக்கை ?வளியிட்டுள்ளார். இதை, பி.ஏ.சி., என்ற பார்லிமென்ட்டின், பொது கணக்கு கமிட்டி ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், தெரிய வந்துள்ளதாவது:
நாட்டில், தற்போது, மருத்துவ ரீதியாக, 57,443 எக்ஸ்-ரே நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 5,270 நிலையங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ளன.அனுமதியில்லாமல், செயல்படும், 52,173 நிலையங்களில், பலவற்றில் பழைய எக்ஸ்-ரே கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. ஒழுங்குமுறை வாரியத்தில், போதுமான ஊழியர்கள் இல்லாததால், எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க முடியவில்லை.
இந்த வாரியத்தில், இன்ஜினியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மொத்தமே, 300 பேர் தான் உள்ளனர்.மருத்துவ ரீதியான எக்ஸ்-ரே நிலையங்களை ஒழுங்குப்படுத்த, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கதிரியக்க பாதுகாப்பு இயக்குனரகம் அமைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை, கேரளா, மிசோரம் மாநிலங்கள் மட்டுமே செயல்படுத்தி உள்ளன.இவ்வாறு, அறிக்கையில் தெரியவந்து உள்ளது.