பாதரசத்தால் விநாயகர் சிலை செய்ய வேண்டும் என்ற ஆசைக்கு 40 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்து தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டார் சித்த வைத்தியர் ஒருவர்.
பாதரசம் என்பது ஒரு திரவ நிலை உலோகம். நீரைவிட பல ஆயிரம் மடங்கு அடர்த்தியானது. குறைந்த வெப்பக் கடத்தி. ஐ.நா.சபையால் பட்டியலிடப்பட்ட 6 நஞ்சுகளில் பாதரசமும் ஒன்று.
வெள்ளியை விட அதிகளவில் மிளிரும் தன்மை கொண்டது. இந்த முகம் பார்க்கும் கண்ணாடி செய்ய பயன்படுகிறது. மருத்துவ உபகரணங்களான தர்மா மீட்டர், ரத்த அழுத்த மாணி உள்ளிட்டவைகளுக்கும் பாதரசம் நீர்மமாக நிரப்படுப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தங்கம் உள்ளிட்ட சில உலோகங்களை உருக்கவும் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இப்படி இதன் குணாம்சங்களும், பயன்களும் பட்டியலில் நீள்கிறது.
வேதியியலில் பாதரசம் தனக்கென்று தனி ரசிகக் கூட்டத்தையே கொண்டுள்ளது எனலாம். தரையில் பட்டால் சிதறியோடும் பாதரசத்தை கெட்டிப்படுத்துவது கடினம். பாதரசத்தை திடப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளையே முதலீடாக போட்டுள்ளனர்.
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பாதரசத்தை கெட்டிப்படுத்துவது தொடர்பான சில குறிப்புகள் இருப்பதாகவும் அது ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு தற்போது அதை பற்றி தெரியாமலே போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் தனது 40 ஆண்டு காலத்தை இதற்காக அற்பணித்து பாதரசம் மூலம் விநாயகர் சிலை செய்யும் தனது முயற்சியில் வெற்றியும் கண்டுவிட்டார் சித்த வைத்தியர் சண்முகம்.
திருவள்ளூரை அடுத்த ஆயில்மில் பகுதியில் வசித்து வருபவர் மூங்கிலான் என்பவரின் மகன் சண்முகம் (65). இவர் புற்று நோய் உள்ளிட்ட சில உயிர்கொல்லி நோய்களுக்கு மட்டும் சித்த வைத்திய முறையில் மருந்து வழங்கி வருகிறார்.
இதுகுறித்து சண்முகம் கூறியது: எனது தந்தை கடந்த 70 ஆண்டுகளாக சித்த வைத்திய முறையில் புற்றுநோய், பால்வினை உள்ளிட்ட சில கொடிய வியாதிகளுக்கு மட்டும் மருந்து தயாரித்து வழங்கி வந்தார். இதற்காக இமயமலை, கொல்லி மலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மூலிகைகளை பறித்து வருவார்.
அந்த காலத்தில் பாதரசத்தை மூலிகைகள் மூலம் வசப்படுத்தி அதில் வினாயகர் சிலை செய்ய முயற்சித்து வந்தார். ஆனால் அதில் வெற்றி காணாமல் அவரது காலம் முடிந்து விட்டது. அந்த முயற்சியை நான் கையிலெடுத்து கடந்த 40 ஆண்டுகளாக உழைத்தேன்.
இதற்காக 50 முறைகளுக்கு மேல் இமயமலை, கொல்லி மலைகளுக்குச் சென்றுள்ளேன். பல லட்ச ரூபாய் செலவு செய்துள்ளேன். இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் நவபாஷனங்களை கண்டறிந்து அதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நவபாஷன வினாயகர் சிலையை செய்து முடித்தேன்.
பாதரசத்தை திட நிலைக்கு மாற்ற முப்பரண்டை என்ற முக்கிய மூலிகை தேவை. அதை கண்டறிவது மிகவும் கடினம். மேலும் அதனுடன் வேறு சில முக்கிய மூலிகைகளை சம அளவில் கலந்து அதில் மூலிகைச் சாறு தயாரித்து அதன் மூலம் இன்று பாதரச விநாயகர் சிலையை வடித்துள்ளேன்.
தற்போதுள்ள வினாயகர் சிலை நன்றாக காய்ந்த பின்னர் அதற்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்த சிலை முழுக்க முழுக்க எனது ஆத்ம திருப்திக்கு மட்டுமே. இதில் எவ்வித வியாபார நோக்கமும் கிடையாது என்றார்.
யார் ஒருவர் பாத ரசத்தை (ரசமணி) கெட்டியாக்கிராரொ அவரே சிறந்த சித்த மருத்துவர் !
தமிழன் மூளைக்கு மதிப்பு அதிகம்!