காமன்வெல்த் மாநாட்டுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங்கும் இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் கருணதிலகா அமலகாமாவும் நேற்று சந்தித்து பேசினார்கள்.
அப்போது இருநாட்டு மீனவர்கள் பிரச்சினையில் சுமூக தீர்வு காண இருதரப்பினரும் சந்தித்து பேசவேண்டும் என்ற கோரிக்கை பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்பை கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்கு பின்னர் நடத்துவது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சுஜாதசிங் கூறுகையில், ‘‘நாங்கள் மீனவர்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்சினை குறித்து விவாதித்தோம். தற்போது இலங்கை சிறையில் உள்ள 77 மீனவர்களை விடுவிப்பது குறித்தும் மீனவர்கள் பிரச்சினைக்கு இருநாடுகளும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விரைவில் இருதரப்பு மீனவர்களின் சந்திப்பு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்வது பற்றியும் விவாதித்தோம்’’ என்றார்.