அமெரிக்கா- இந்தியா நாடுகளிடையே ராஜதந்திர மோதல்!

obama_manmohen_001இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையே கருத்து மோதல் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

“தேவயானி மீதான விசா மோசடி வழக்கு, அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையேயான உறவை கடுமையாக பாதித்துள்ளது. இந்த வழக்கு புதிதாக சட்டச்சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் முரண்பாடான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு காண அமெரிக்க வெளியுறவுத் துறையும் இந்திய அரசும் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில் தேவயானி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால், பிரச்சினை மேலும் சிக்கலாகிவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தி அமெரிக்கன் இன்ட்ரஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,

“தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள கடுமையான நிலையை பார்க்கும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இந்த விவகாரம் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமரசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கச் சட்டப்படி எந்த வகையான குற்றத்தையும் மன்னிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இரு நாடுகளின் அரசுகளும் பேச்சு நடத்தி, தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் அந்தஸ்து, சலுகை, உரிமை ஆகியவை குறித்து முடிவு செய்ய வேண்டும். அதை இரு நாடுகளும் முறைப்படி அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

TAGS: