இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே — இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது ?
இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
முன்னதாக , விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறார்.
தேவயானியை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு தேவயானி நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி, சையத் அக்பருதீனும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
“இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் நிரபராதி என்பதை தேவயானி கோபர்கடே வலியுறுத்தினார்”, என்றார் அக்பருதீன்.
” அவர் இந்தக் காலகட்டத்தில் தனக்கு பலத்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கியதற்காக,இந்திய அரசுக்கும், குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கும், இந்திய மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்”, என்றார் அக்பருதீன்.
முன்னதாக வியாழக்கிழமை , தேவயானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முறையாகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதற்கிடையே, அவரை நியுயார்க்கில் இருக்கும் ஐ.நாவில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக இந்தியா நியமித்ததை அடுத்து அமெரிக்கா அவருக்கு ராஜீய பாதுகாப்பு வழங்கியதாகவும் செய்திகள் தெரிவித்தன.
“குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கும்” -அமெரிக்கா
தேவயானியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நியுயார்க்கில் இந்தியத் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே, அவரது இந்தியப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
தனக்குத் தருவதாக அவர் விசா விண்ணப்பத்தில் ஒப்புக்கொண்ட ஊதியத்தைத் தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், தேவயானியோ, சங்கீதா தன்னை மிரட்டியதாகவும், வீட்டில் இருந்த பொருட்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டு,கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் ராஜீய நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்தியா, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கி வந்த பல சலுகைகளை விலக்கிக்கொண்டது.
அமெரிக்காவைக் கண்டிக்கிறார் கார்ல் இந்தர்பர்த்
ஆனால் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தை அமெரிக்கா கையாண்ட வித்த்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் முன்னர் தெற்காசியப் பிரிவின் துணைச் செயலராகப் பணிபுரிந்தவரான, கார்ல் இந்தர்பர்த் கண்டித்தார்.
“இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன ஆனால் என்னுடைய பார்வையில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிகாரிகள் மிகவும் மோசமாகவே கையாண்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஆரம்பத்திலிருந்தே இதை சற்று மேலும் ராஜதந்திரத்துடனும் நாசுக்காகவும் கையாண்டிருக்கவேண்டும். தேவயானி கைது செய்யப்பட்டது, சிறை வைக்கப்பட்டது, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது ஆகிய எல்லாமே, ஒட்டுமொத்த ராஜிய நடத்தைக்கான எல்லா அளவுகோல்களுக்கும் எதிராக இருக்கிறது. இந்த விஷயம் கையாளப்பட்ட விதம் குறித்து இந்தியர்கள் மிகவும் கோபமடைவதற்கு எல்லாக் காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன்”, என்றார் கார்ல் இந்தர்பர்த்
மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் குறித்து வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தது ஒரு உதவிகரமான விஷயம் . ஆனால் தேவயானி கோபர்கடேயிடமும் அமெரிக்கா மன்னிப்பு கோரவேண்டியிருக்கிறது என்றார். இதைத் தாண்டி இரு நாடுகளும் இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவத்துக்கு இட்டுச் சென்ற அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது முக்கியம்,என்றார். -BBC