பள்ளிக்கு வந்தால் ரூ.2 கிடைக்கும்: அரசின் அதிரடி

women_study_001பள்ளிக்கு வருகைதரும் பெண் குழந்தைகளுக்கு தினமும் 2 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க கர்நாடக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, விதானசெளதாவில் வெள்ளிக்கிழமை கர்நாடக அமைச்சரவைக்கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளுக்கு வருகை தரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக ஊக்கத்தொகை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

எனவே, தினமும் பள்ளிக்கு வருகைதரும் 1ம் வகுப்பு பெண் குழந்தைகளுக்கு 2 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்ததிட்டத்தை முன் திகதியிட்டு ஜனவரி 1ம் திகதி முதல் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிகழ் கல்வியாண்டில் அடுத்த 3 மாதங்களுக்கு ரூ.4.49 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியை மாணவிகளுக்கு வழங்குவதற்கான வழிமுறைகளை ஆரம்பப்பள்ளிக்கல்வித்துறை வகுக்கும்.

பெண் குழந்தைகள் பள்ளியை இடையிலேயே விடுவதாக மனிதவள குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைஅளிப்பதாகும். இதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளை பள்ளிக்கு வர தூண்டுவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஹெப்பாளில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் 4 ஏக்கர் நிலத்தில் கால்நடை மாளிகை அமைக்க அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.33 கோடி செலவிடப்படும்.முதல்கட்டமாக ரூ.20 கோடியில் கட்டடம் அமைக்கப்படும். கால்நடை மாளிகையில், கால்நடை பராமரிப்புத்துறையின் எல்லா அலுவலகங்களும் இடம்பெறும்.

புதுமுகக்கல்லூரிகளில்(பியுசி)பணியாற்றிவரும் விரிவுரையாளர்களுக்கு பி.எட்.கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பி.எட். படிக்காத 1349 விரிவுரையாளர்கள், பி.எட்.படிப்பதற்கு ஊதியத்துடன் கல்விக்கட்டணத்தையும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு ரூ.9.44 கோடி செலவிடப்படும். இவர்கள் கல்வி பயிலும் காலத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

TAGS: