அரசியல் களத்தில் மோடி- ராகுல் இருவரும் சூறாவளி பிரசாரம்

modi rahulபுதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் அவரவர் கட்சிக்கு ஆதரவு திரட்டுவது மற்றும் யூகங்கள் வகுப்பது உள்ளிட்டன தொடர்பாக காங்,. துணை தலைவர் ராகுல் ( பிரதமர் வேட்பாளராகலாம்) , பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியார் தங்கள் வழியில் பிரசார பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாநில வாரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மோடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ராகுலும் தற்போது செயலாற்ற துவங்கியிருக்கிறார். வரவிருக்கும் தேர்தலில் கட்சி செயலாற்றும் விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு காங்., துணை தலைவர் ராகுல் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ளார். அங்கு, ஐ.டி., பி.டெக்., வேளாண் துறையில் சாதித்த இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பல்வேறு எதிர்ப்பு கணைகளை சந்தித்து வரும் காங்., கட்சி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள பல முனைப்பு விஷயங்களில் ஈடுபட்டு வருகிறது. லோக்பால் மசோதா கொண்டு வந்தது, நேரடி காஸ் மானியம், அனைவருக்கும் உணவு என்ற திட்டம் இப்படி பல்வேறு விஷயங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும் என காங்., நம்புகிறது.

வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுலை அறிவிக்கலாம் என காங்., மூத்த நிர்வாகிகள் ஆதரவு கொடி காட்டியுள்ளளனர். இதனால் ராகுல் தற்போது முன்னிறுத்தப்படுவது உறுதியாகி விட்டது,

ராகுல் நேற்று பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நிருபர்களிடம் நேற்று பேசிய ராகுல் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்றார். இதில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். இது ஊழல் வாதிகள் மற்றும் கிரிமினல்களுக்கு சீட் கிடையாது என்பதையே மறைமுகமாக கூறினார் ராகுல்.

இந்நிலையில் கர்நாடகாவுக்கு ராகுல் இன்று சென்றார். இவருடன் மத்திய அமைச்சர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி, சச்சின்பைலட் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு முதல்வர் சீத்தாரமையா மற்றும் காங்., மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாணவர்களை சந்தித்தார். ஐ.டி., பி.டெக்., வேளாண் துறையில் சாதித்த இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இவர்கள் கூறும் யோசனைகளை ராகுல் கேட்டறிந்தார். இதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்று ராகுல் பேசியதாவது: நமது நாட்டில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது, நான் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என விரும்புதாக இருந்தால், அது, அதிகார மையத்தில் பெண்கள் வர வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இதையே காங்கிரஸ் விரும்புகிறது. பெண்கள் எதையும் சாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க கூடாது. நான் காங்கிரசில் இணைந்ததற்கான காரணம் என்னவெனில், இந்த கட்சிதான் அப்பழுக்கற்ற சீர்திருத்தம் கொண்டு வர முயற்சிக்கிறது.

ஆம் ஆத்மி மீது பாய்ச்சல்: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் முக்கியமாக 2 விஷயத்தை கவனத்தில் வைத்து கொள்ளும். ஒன்று ஆண், பெண் தேர்வு மற்றொன்று,வயது. இதன் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு இருக்கும். அரசியல் நடவடிக்கையில் வெளிப்படையான தன்மை வேண்டும். ஆம் ஆத்மி கட்சியில் உள்விவகாரங்களை நாம் அறிந்து கொள்ள முடியாது. காரணம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் அரசியலமைப்புக்கள் வராமல் போய் விட்டன. ஆம் ஆத்மி கட்சி பாவ்லா அரசியல் செய்து வருகிறது. எங்களின் நிலை வித்தியாசமாக இருக்கும். மற்றவர்களின் செயல்பாட்டை குறை கூறுவது என்பது மிக எளிது. பா.ஜ., ஒரு தலைவரை இந்திய நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் வைக்க விரும்புகிறது. ஆம் ஆத்மி நிர்வாகத்தை சீர்குலைக்க முயல்கிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

கோவாவில் மோடி : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தொடர்ந்து பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் பெருகி வருகிறது. இவரின் பல கூட்டங்களில், தொண்டர்கள் பங்கேற்க 10 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்து பலரும் டிக்கெட் பெற்று வருகின்றனர். நாளை கோவாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க சுமார் ஒரு லட்சம் பேர் வரை தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் சிறுபான்மை மக்கள் 25 சதவீதத்தினர் ஆகும். சிறுபான்மை மக்களை அதிகம் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என்றார் கோவா பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர்.

விவேகானந்தர் விழாவில் மோடி: இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் மகாத்மா மந்திர் என்ற இடத்தில் நடக்கும் விழாவில் மோடி பங்கேற்கிறார். சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாபபட்டு வருகிறது. இந்த நிறைவு நாள் விழாவில் மோடி இன்று சிறப்புரையாற்றவுள்ளார்.

TAGS: