தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி

azhagiri-dihசென்னை, ஜன. 25–தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

கட்சியில் இருந்து என்னை ஏன் என்று நீக்கினார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. நான் ஹாங்காங் சென்றேன். அந்த தகவலை கட்சி தலைமைக்கு தெரிவிக்கவில்லை. அதனால்கூட என்னை நீக்கி இருக்கலாம். தி.மு.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை.

மதுரையில் சிலர் மீது சாதியை சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒருவர் சாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும்போது புகார்தான் செய்வார். உங்களை திட்டினால் சும்மா இருப்பீர்களா?.

என்னை கட்சியில் இருந்து நீக்கியபின் எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் அதிக பலத்துடன் இருக்கிறார்கள். என் நிலைப்பாடு குறித்து வருகிற 30–ந்தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் தெரிவிப்பேன்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து தொண்டர்களை சந்தித்து பேசுவேன். அதுவரை அமைதியாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளேன். தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

எனது ஆதரவாளர்கள் மீது மட்டும்தான் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.

இதுபற்றி நான் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். ஆனால் அவர் எனக்கு இது தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நான் பேசி விட்டு சென்ற உடன் என்னை நீக்கி இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.

என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தப் பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம். முன்பை விட ஏழை மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்யப்படும்.

தி.மு.க.வுக்காக உழைத்த தொண்டர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் நீக்கியுள்ளனர். இது சரியானது தானா என்றுதான் நியாயம் கேட்டேன். நான் நியாயம் கேட்கக் கூடாதா? அதற்காக என்னையும் நீக்கி உள்ளனர்.

தலைவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா? நான் உரத்தக் குரலில் பேசவேக் கூடாதா? அப்படியானால் தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றுதானே அர்த்தம்.

நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள்.

எனக்கு தென்மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்பது இல்லை. என்னை கலந்து ஆலோசிக்காமலே தென் மாவட்ட தி.மு.க. பற்றி முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்?

எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது.

ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை. மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.

அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன்.

என்னை நீக்கியதால் தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற பழி துடைக்கப்பட்டுள்ளதாக வீரமணி கூறியுள்ளார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கே ஆதாயம் கிடைக்கிறதோ அங்கே போய் சேர்ந்து விடுவார்.

கருணாநிதி முதல்வரானதும் தி.மு.க.வை புகழ்ந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி காத்த வீராங்கனை என்றார். ஆதாயம் கிடைக்கும் இடத்துக்கு ஏற்ப மாறி, மாறி பேசுவார்.

கட்சியில் இருந்து நான் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. அந்த அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்காக நான் என் தொண்டர்களை ஒரு போதும் கைவிட்டு விடமாட்டேன்.

ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும்.

ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வது போல எனக்கு தோன்றுகிறது.

தி.மு.க. தலைவரை யாரோ ‘‘பிளாக்மெயில்’’ செய்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

நான் நியாயத்துக்காக போராடுவேன். 30–ந்தேதி என் ஆதரவாளர்கள் நடத்தும் விழாவில் பங்கேற்பேன். அப்போது நான் எல்லாவற்றையும் சொல்வேன்.

என்னை நீக்கிய பிறகு தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி கூட்டணி ஏற்பட்டால் இரு கட்சிகளுக்குமே லாபம் ஏற்பட போவதில்லை. தே.மு.தி.க.வை நம்பி தி.மு.க. வெற்றி பெற முடியாது.

அ.தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே பணிகளை தொடங்கி விட்டனர். இதற்கான எல்லா முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

என் மீதான நடவடிக்கை எனக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது. தலைவர் ஒப்புதல் இல்லாமல் கூட இது நடந்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பங்களிப்பு எல்லோருக்கும் தெரியும். எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று மு.க.அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. நியாயத்துக்காக போராடியதற்காக தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள். ‘வருங்காலமே’ என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் தேவை இல்லை. தி.மு.க. தானாகவே தோற்கும். கட்சியில் இருந்த முறை கேடுகளை எடுத்து கூற முற்பட்டது நான் செய்த தவறு.

தி.மு.க.வில் நடந்து இருக்கும் ஊழலுக்கான ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

TAGS: