மதுரை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பணம் பட்டுவாடா நடந்துவிட்டது. இதை எந்த கட்சி செய்தது என கூற முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு சென்னை, கோவை, திருச்சியை தொடர்ந்து மதுரையில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பயிற்சி அளித்தார். மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் (கலெக்டர்கள்), சட்டமன்ற தொகுதிக்கான முதன்மை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.
வாக்கு எண்ணிக்கை மிக முக்கிய பணி என்பதால் கவனமாகவும், சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காமலும் செயல்படவேண் டும் என பிரவீன்குமார் அறிவுறுத்தினார்.பின்னர் நிருபர்களிடம் பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு தபால் ஓட்டு வரவில்லை என புகார் வந்துள்ளது. மொத்த தபால் ஓட்டு விபரம், எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிக்கை கேட்டு உள்ளேன். சில கலெக்டர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஒரு சிலர் இன்னும் கொடுக்கவில்லை. தபால் ஓட்டுக்கான படிவத்தில் வாக்காளர் பட்டியல் எண், பாகம் எண் சரியாக குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளனர். கலெக்டர்களின் அறிக்கை கிடைத் தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில புகார் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அது பற்றி கூற முடியாது. இவ்வாறு தெரிவித்தார். அப்போது, ‘பணம் பட்டுவாடா தொடர்பாக மன வருத்தம் அடைந்ததாக கூறினீர்கள். எந்த கட்சி அப்படி பணம் பட்டுவாடா செய்தது‘ என நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த பிரவீன்குமார், ‘நீங்களும் மன வருத்தம் அடையவில்லையா‘ என திருப்பி கேட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ‘பணப்பட்டுவாடா செய்தது எந்த கட்சி என்று கூற முடியாது. கடைசி இரண்டு நாளில் பண பட்டுவாடா நடந்தது. பல இடங்களில் பணம் பறிமுதல் செய்துள்ளோம். வழக்கும் பதிவு செய்தோம். எவ்வளவோ நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதை மீறி பணப்பட்டுவாடா நடந்து விட்டது. இதனால் மன வருத்தம் அடைந்தேன். ‘ என்றார்.