சதி வலையில் மீனவர்கள்!

tamilnadu_fishermen_001போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக, தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இத்தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று மத்திய அரசும் உறுதி கூறியுள்ளது.

இலங்கையில் கொலை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்தான் என்றாலும், 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் மரண தண்டனை பெற்ற எந்த சிறைக் கைதியும் தூக்கிலிடப்படவில்லை. இவர்களது மேல்முறையீடு அல்லது கருணை மனு ஏற்கப்பட்டு இவர்களது மரண தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகிறது. ஆகவே, இந்த ஐந்து தமிழக மீனவர்களின் மரண தண்டனையும் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்பது உறுதி.

“மரண தண்டனை கூடாது’ என்ற குரல் ஒலிக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. அன்பின் வழியது உயிர்நிலை எனும் பௌத்தம் தழுவிய இலங்கை, மற்ற நாடுகளைவிடவும் முனைப்பாக மரண தண்டனையை ஒழிக்க வேண்டியது அவசியம்.

இப்போது இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மரண தண்டனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இலங்கை அரசு செய்ய வேண்டியது. அதைவிடுத்து, வழக்கின் தன்மையைத் தீவிரமாகக் காட்டி, மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு நீதிமன்றத்தை தள்ளுவது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல.

போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை என்பது இலங்கையில் சட்டமாக இருந்தாலும், இந்த வழக்கில் இலங்கை போலீஸார் நடந்துகொண்ட விதமும், காட்டிய அலட்சியமும் அவர்கள் தமிழ் நாட்டினர் மீது கொண்டிருக்கும் மனக்கசப்பை வெளிப்படுத்துவதாகவே இருந்தது என்பதே உண்மை.

இலங்கையில், முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்குப் பிறகு, இந்திய – இலங்கை கடற்பரப்பில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்துமே எல்லை தாண்டி மீன்பிடித்த சம்பவங்களே தவிர, ஆயுதக் கடத்தலோ, போதைப்பொருள், மருந்துகள் அல்லது பெட்ரோலியப் பொருள்கள் கொண்டு சென்றதாகவோ எந்தவொரு சம்பவமும் நடந்ததில்லை. இவை இலங்கைக் கடற்படையும் இந்திய கடற்படையும் அறிந்திருக்கும், இரு தரப்பு கூட்டங்களில் பகிர்ந்துகொள்ளும் விவரங்களாக இருக்கின்றன.

இந்நிலையில், 2011 நவம்பர் 28-ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐந்து பேரும், போதைப் பொருள் வைத்திருந்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் மீதான வழக்கு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படாமல், கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்பதிவு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஐந்து பேரும் இதற்கு முன்பாக எந்தவொரு போதைப்பொருள் வழக்கிலும் தொடர்புடையவர்கள் அல்லர் என்று இந்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் சான்று தரப்படுகிறது.

ஆனாலும், இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இலங்கை போலீஸார் இந்த வழக்குக்கு மேலதிகமான கவனம் செலுத்தியதற்கும், இலங்கை அரசு இதை ஊக்கப்படுத்தியதற்கும் ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். இந்த வழக்கில் இந்த ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் – இது பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவது உறுதி என்றாலும் – தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழக மீனவர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும். எல்லை தாண்டிச்

சென்றால், பொய் வழக்கு போட்டு, நம்மை தூக்கிலிடுவார்கள் என்ற பேரச்சம் அவர்களை இலங்கைக் கடல் எல்லைக்கு அப்பால் நிறுத்தி வைக்கும் என்கிற எண்ணத்தால் மட்டுமே இந்த வழக்கை ஒரு வாய்ப்பாக இலங்கை போலீஸாரும், இலங்கை அரசும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

மீனவர்களிடத்திலும், தமிழக மக்களிடத்திலும் இந்தத் தீர்ப்பின் மூலம், அச்சத்தை ஏற்படுத்துவதைவிட, கோபத்தையே கிளறிவிட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்த விவகாரத்தில் இந்திய அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும். இவர்கள் விடுதலை குறித்து உறுதி கூற இயலாது என்றாலும், மரண தண்டனைத் தீர்ப்பு மாற்றி எழுதப்படுவது உறுதி. ஆனால், அது மட்டுமே போதாது! -http://www.dinamani.com/editorial

TAGS: