இவ்விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, கட்டாய மதமாற்ற நிகழ்ச்சி நடவடிக்கைகளில் அரசோ, பாஜகவோ ஈடுபடவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபாலும் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் மதமாற்ற விவகாரத்தை திங்கள்கிழமை எழுப்பினர். வேணுகோபால் பேசியதாவது:
கேரளத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்பான இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குஜராத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவங்களை அரசு கண்டிக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.
இந்தச் சம்பவங்கள், ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்புகள் ஒரு நோக்கத்தோடு செய்யும் செயல்களாகவே தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் அமைப்பாளர்கள், பல்வேறு போலியான வாக்குறுதிகளை அளித்து மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார்கள் என்றார் வேணுகோபால்.
அவருடன் இணைந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ராஜேஷ் ரஞ்சன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் உள்ளிட்ட எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசினர்.
“பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்’: மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து மதமாற்றத்துக்கு ஹிந்து அமைப்புகள் தூண்டுகின்றன.
மதமாற்றம் தொடர்பான கவலைகளுக்கு பிரதமர்தான் விளக்கமளிக்க வேண்டும். ஏனெனில், அவரது உத்தரவுதான் இந்த நாட்டை வழிநடத்துகிறது என்று கார்கே தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியபோது ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டனர். இதனால் அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: மதமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்த கோரிக்கையை ஏற்க நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மறுத்தார்.
அவர் கூறுகையில், “ஒரு விஷயத்தில் அமைச்சர் பதிலளித்த பிறகு பிரதமர் விளக்கம் தர வேண்டியதில்லை’ என்று தெரிவித்தார். மதமாற்ற விவகாரம் குறித்து தாம் கடந்த வாரம் விளக்கம் அளித்ததையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மயங்கி விழுந்த எம்.பி.: முன்னதாக, மக்களவையில் மதமாற்ற விவகாரத்தை முன்வைத்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யான ஏ.சம்பத் திடீரென்று மயங்கி விழுந்தார். அவருக்கு உதவ அவையின் துணைத் தலைவர் தம்பிதுரை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் விரைந்தனர். அவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சம்பத் உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தம்பிதுரை மீது காகிதங்கள் வீச்சு
மதமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், ஒரு செய்தித்தாளைப் பல துண்டுகளாகக் கிழித்து அவைத் தலைவர் இருக்கையை நோக்கி வீசியெறிந்தார்.
அந்தக் காகிதத் துண்டுகள் அவையின் மையப்பகுதியில் விழுந்தன. அப்போது அவையை வழிநடத்திய துணைத் தலைவர் தம்பிதுரை இதனால் கோபமடைந்தார். “”என் மீது ராஜேஷ் ரஞ்சன் காகிதங்களை வீசிய செயலை கடுமையாகக் கண்டிக்கிறேன். இது மிகவும் மோசமானது. அவைத் தலைவர் இருக்கைக்கு மரியாதை தர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அரசுக்கு தொடர்பில்லை
மக்களவையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
மதமாற்றம் என்பது தன்னார்வத்தின் பேரில் இயல்பாக நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் அரசுக்கோ, ஆளும் கட்சிக்கோ (பாஜக) எந்தத் தொடர்பும் இல்லை. தனிநபர்கள் யாராவது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராவது சட்டத்தை மீறினாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.
மதமாற்றத்திலோ, தாய் மதத்துக்குத் திரும்பும் நடவடிக்கையிலோ அரசு ஈடுபடவும் இல்லை; அதை ஆதரிக்கவும் இல்லை. ஒட்டுமொத்த நாடும் அமைதியாக இருக்கிறது. ஆனால் சிலர் மட்டும் அதிருப்தியில் உள்ளனர். இந்த விவகாரத்தை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் விரும்பினால், அதை நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்யுங்கள். இங்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது.
கேரளத்தில் நடைபெற்ற மதமாற்றம் குறித்து காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் பேசினார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசுதான். துரதிருஷ்டவசமாக அது அவரது கட்சியின் அரசாகும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் கேரளத்தில் உள்ள காங்கிரஸ் அரசை யார் தடுத்தது?
பிரதமர் தப்பி ஓடுவதாக எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்புவது சரியல்ல. எங்கள் தலைவர் மீது நீங்கள் தொடர்ந்து தாக்குதல் தொடுக்கிறீர்கள். நமக்குள் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் என்பது மக்களவைத் தேர்தலில் நடந்ததைப் போல் உங்களையே திருப்பித் தாக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.
-http://www.dinamani.com
இந்துக்களை கொத்து -கொத்தாக இஸ்லாமியனும் -கிறிஸ்தவனும் மதம் மாற்றினால் எவனும் கேட்க கூடாது..பிறர் விரும்பி தாய் மதம் மாறி வந்தால் கொந்தளிப்பு…??? போங்கடா >>>>>