ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், ‘ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் ஒத்துள்ளது. இதனை உறுதி செய்த பிறகே அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மந்திரி வி.கே.சிங் ஈராக்கிற்கு சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார். விமானம் மூலம் வரும் அவர்களின் உடல்கள் அமிர்தசரசிற்கு கொண்டு செல்லப்பட்ட பின் கொல்கத்தாவிற்கு செல்லும்’ என்றார். மேலும், இறந்த இந்தியர்களுக்கு பாராளுமன்றத்தில் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர். அவர்கள் மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈராக்கில் கடத்தி கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் விவரங்களை வெளியுறவு துறை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த தர்மிந்தர் சிங், ஹரிஷ்குமார், ஹர்சிம் ரஞ்சித்சிங், கன்வால் ஜித் சிங், மால்கித் சிங், ரஞ்சித் சிங், சோனு, சந்தீப்குமார், மஞ்ஜிந்தர் சிங், குருசரண் சிங், பல்வந்த் ராய், ரூப் பால், தேவிந்தர் சிங், குல்வந்திரி சிங், ஜதிந்தர் சிங், நிஷான் சிங், குர்தீப் சிங், கமல்ஜித் சிங், கோபிந்தர் சிங், பிரித்பால் ஷர்மா, சுக்விந்தர் சிங், ஜஸ்வீர் சிங், பர்விந்தர் குமார், பல்வீர் சந்த்,
சுர்ஜித் மைன்கா, நந்த்லால், ராகேஷ்குமார் ஆகியோர் அடங்குவர்.
இமாசலப்பிரதேசத்தை சேர்ந்த அமன்குமார், சந்தீப்சிங் ரானா, இந்தர்ஜித், ஹேம்ராஜ் ஆகியோரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாமர் திகாதர், கோகன் சிக்தர் மற்றும் பீகாரை சேர்ந்த சந்தோஷ்குமார் சிங், பித்ய பூஷன் திவாரி, அதாலத் சிங், சுனில்குமார் குஷ்வாலா, தர்மேந்திர குமார் மற்றும் ராஜுகுமார் யாதவ் உள்பட 39 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
-athirvu.com