சிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது?

கத்துவாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமியின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டின் அடுப்பங்கரையை சமீப நாட்களில் பயன்படுத்தியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பச்சை வண்ண தாயத்து தாங்கிய சிவப்பு கயிறு அந்த வீட்டின் கதவுகளில் கட்டப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்காக வேண்டுதலுடன் அந்த கயிறு கட்டப்பட்டிருக்கலாம்.

ஆனால், எந்த வேண்டுதல்களும் அந்த சிறுமியை காக்கவில்லை. ஹூம், சொல்லபோனால் அவள் மீதான தாக்குதல்தான் வீரியமாக இருந்தது.

எட்டு வயது பெண் குழந்தை கோயிலில் சிறைப்பிடிக்கப்பட்டாள், கழுத்தை நெரித்து கொல்லப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவள் ஒரு வார காலமாக கூட்டு வல்லுறவு செய்யப்பட்டாள். பின் அவளது உடல் ஒரு காட்டுப் பகுதியில் தூக்கி எறியப்பட்டது என்கிறது காவல் துறை.

அவள் காணாமல் போய் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட ஜனவரி 10 – 17 இடையிலான அந்த ஒரு வார காலம் முழுவதும், அவளுக்கு போதை மருந்து அளிக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், உத்தர பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரை அழைத்து, ‘உனக்கு கேளிக்கை வேண்டுமானால் இங்கே வா` என்று அழைத்திருக்கிறார் என்று நீதிபதி முன் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

குற்றப் பிரிவின் மீது நம்பிக்கை இல்லை

குழந்தை மீதான பாலியல் வல்லுறவாக மட்டும் இந்த பிரச்சனை பார்க்கப்படவில்லை. இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தின் மீது இந்து முஸ்லிம் சாயம் பூசப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள சந்தையில் கடந்த 13 தினங்களாக கூட்டாக இந்து சமூகப் பெண்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் அந்த இடத்துக்கு அருகே அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் முன்னாள் ஊராட்சி தலைவர், தங்களுக்கு குற்றப் பிரிவு போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்கிறார்.

குற்றம்சுமத்தப்பட்டவரை காக்க மூவர்ணக் கொடி

ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையின் தலைவர் வைத்யா சொல்கிறார், “பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களால் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியாதா?” என்கிறார்.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான சஞ்சே ராமின் மாமா பிஷாந்தாஸ் ஷர்மா, தன்னுடைய மருமகனுக்கும் இந்த வழக்குற்கும் சம்பந்தமில்லை, பொய்யாக பகர்வால் சமூகத் தலைவர் தலிப் ஹுசைனின் அழுத்தத்தின் பேரில் தம் மருமகன் இவ்வழக்கில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்.

அவர் மருமகனுக்கும் தலிப் ஹுசைனுக்கும் என்ன பகை என்று வினவியபோது, பகைக்கான மூலக்காரணங்கள் எல்லாம் தமக்கு தெரியாது என்றும் அந்த சமயத்தில் அவர் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் கூறுகிறார்.

இந்த விவகாரத்திற்கு பின், இந்துக்கள் ஆதிக்கம் உள்ள பகுதியில், பழைய அமைப்பான `இந்து ஏக்தா மஞ்சா’ மீண்டும் உத்வேகமாக செயல்பட தொடங்கியது.

அவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார்கள். சில பகுதிகளில் இந்தியாவின் தேசிய கொடியான மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இது பலத்த சர்ச்சையை எழுப்பியது. எப்படி பாலியல் வல்லுறவு வழக்கில் சிக்கியவருக்காக மூவர்ணக் கொடியை ஏந்திப் போராடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

சமூக ஊடகங்களில் கத்துவா பாலியல் வன்முறை சம்பவத்தையும், தாத்ரி மாட்டிறைச்சி கொலை சம்பவத்தையும் ஒப்பிட்டு பல்வேறு இடுகைகள் காணப்படுகின்றன. ஏனெனில், அக்லக்கை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் இறந்தபோது, அவரது உடலுக்கு மோதி அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவர் முன்னிலையில் மூவர்ணக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

நில தகராறா?

போலீஸின் குற்றப்பத்திரிகையில், இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி சஞ்சே ராம், பகர்வால் சமூகத்தினர் அந்தப் பகுதியில் குடியமர்வதை எதிர்த்தார். வன்புணர்வு செய்யப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிலம் விற்கப்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

சமீபத்தில் மூன்று பகர்வால் குடும்பத்தினர் ரசானா கிராமத்தில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து கொண்டார்கள். பகர்வால் மற்றும் குஜ்ஜார் குடும்பங்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் குடியமரத் தொடங்கினார்கள். கால்நடை மேய்க்கும் இந்த சமூகத்தினர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள், அதே போல கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் கட்டி சமூகத்தினர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

நாங்கள் எங்கள் நிலத்தை மேய்ச்சலுக்கு என்றுமே பகர்வால் மற்றும் குஜ்ஜார் சமூகத்தினருக்கு கொடுத்தது இல்லை என்கிறார் பிஸந்தாஸ் ஷர்மா. நாங்கள் கட்டி சமூகத்தினருக்கு மட்டும்தான் மேய்ச்சலுக்கு நிலத்தை தருவோம் என்கிறார் அவர்.

கத்துவா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வந்து, வன்புணர்வு செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ‘பாகிஸ்தான் வாழ்க’, ‘பாரதம் ஒழிக’ என்று கோஷமிட்டதாக எங்களிடம் கூறப்பட்டது.

‘எதிரிகள் இல்லாத இடத்தில் எதிரிகளை உருவாக்குதல்’

இந்த சம்பவமானது, எதிரிகள் இல்லாத இடத்தில், எதிரிகளை உருவாக்குகிறது என்கிறார் இடதுசாரி சிந்தனை உடைய திரஜ் பிஸ்மில்.

இந்த சம்பவத்துக்குப் பின் ஜம்முவுக்கும், காஷ்மீர் பள்ளதாக்குக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துவிட்டது என்கிறார் ஜம்முவில் சட்டம் பயிலும் கத்துவாவை சேர்ந்த திரஜ் பிஸ்மில்.

அந்தப் பகுதியில் இந்து – முஸ்லிம் பிளவானது 2008 அமர்நாத் கலவரத்தின் போதே தொடங்கிவிட்டது என்கிறார் அவர்.

மேலும் அவர், எதிர்காலத்தில் இந்தப் பிளவானது அதிகரிக்கப்போகிறது. ‘பிளவு உருவான பின், பாரதிய ஜனதா கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அவர்கள் இப்போது ஆளும் அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள்’ என்கிறார். -BBC_Tamil

TAGS: