கட்டிட விபத்து: நக்கீரன் புகைப்படக் கலைஞரை மிரட்டி முக்கிய புகைப்படங்களை அழித்த துணைஆணையர்!

சென்னையில் நேற்று நடந்த கட்டிட விபத்தில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்பதால் ஒட்டுமொத்தமான மீடியாக்களும் அங்கு குவிந்திருந்தனர். நமக்கு தகவல் கிடைத்தவுடன் புகைப்படக் கலைஞர்களுடன் நேரடியாக களத்திற்கு சென்றோம். அங்கு மீட்பு பணி நடைபெறும் இடத்தில் நமது புகைப்படக் கலைஞர்கள் குமரேசன் மற்றும் அசோக் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து வந்தனர்.

இந்தநிலையில், கட்டிட இடிபாடுகளின் இடையே உடல் சிக்கியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக காவல்துறை தரப்புக்கு தெரிந்தவுடன், நமது புகைப்படக் கலைஞர் குமரேசன் இடிபாடுகளின் இடையே சிக்கிய உடலின் அருகில் சென்று பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் இறந்தவரை இடிபாடுகளில் இருந்து எடுக்கும் காட்சிகளை நக்கீரன் மட்டுமே புகைப்படமாக எடுத்து இருந்தது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அடையார் துணை கமிஷனர் செசாங் ஷாய், நமது புகைப்படக் கலைஞர் குமரேசனை அழைத்து அந்த இடத்தில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அளிக்குமாறும், இல்லையென்றால் கேமராவை பறிமுதல் செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார். தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் இருந்தால் நமது புகைப்படக் கலைஞரும் எதுவும் பேசமுடியாமல் அந்த குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் அழித்தார். அப்போது, துணை ஆணையரின் அருகிலிருந்த சில காவலர்களும் நமது புகைப்படக் கலைஞரை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

ஒரு சம்பவம் நடைபெறும் இடத்தில் புகைப்படங்களை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்களை புகைப்படக் கலைஞர்கள் எதிர்கொள்கிறார்கள். அந்த வகையில் எப்படி காவல் ஆணையர் புகைப்படத்தை அளிக்குமாறு சொல்லலாம் என்பது முக்கிய கேள்வியாகும்? செய்தியின் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் செல்வது ஒரு பத்திரிகையாளரின் பணியாகும். அந்த பணியை துணை ஆணையர் தடுக்கிறார்.

உண்மையான புகைப்படங்கள் வெளியில் செல்வதால் துணை ஆணையருக்கு என்ன தான் பிரச்சினை? உடல் எடுக்கப்பட்டது காவல்துறைக்கு தெரிந்ததும், போலீசார் ஊடகவியலாளர்களை அதை புகைப்படம் எடுக்க விடாமல் தொடர்ந்து தடுத்து வந்ததை நேரடியாக நேற்று பார்க்க முடிந்தது. இரவு பகல் பாராமல் உழைக்கும் புகைப்படக் கலைஞர்களின் அத்தகைய உழைப்பை தடுப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? காவல்துறைக்கு எந்தவிதமான இடையூறுகளையும் செய்யாமல் எங்கள் பணியை செய்து வந்தாலும் எங்கள் பணியை தடுத்த துணை ஆணையர் செசாங் ஷாய்யின் இந்த அடக்கு முறை சரிதானா?

-nakkheeran.in

TAGS: