சென்னை: பாஜகவுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரிதான் விழுந்திருக்கு. இப்படி ஒரு “மெகா தோல்வியை” மோடி இதற்கு முன்பு சந்தித்திருக்கவே மாட்டார்.
மக்களுக்கு தங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் என்று இதுவரை தெரியாமல் விட்டாலும், இனிமேலாவது மோடி அரசு தெரிந்துகொள்வது அவசியம்.
மாநில தேர்தல் தோல்விகளில் முக்கியமான காரணமே விவசாயிகளின் கோபம்தான். அவர்களின் வயிற்றெரிச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பத்தினரின் கூக்குரல்கள் விரட்டி விரட்டி வந்திருக்கிறது.
தூக்கில் தொங்கினர்
விவசாயிகளின் புறக்கணிப்புக்கு ஒரு அளவில்லாமல் மத்திய அரசு நடந்து கொண்டது. விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்கவில்லை. எத்தனையோ போராட்டங்களை டெல்லி வீதியிலிருந்து நம்ம ஊர் டெல்டா வீதிகள் வரை நடத்தியும் கொஞ்சமும் அசைந்து தரவில்லை. தற்போதைய தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ மிக முக்கிய காரணம், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும், அதன் விளைவாக அவர்கள் தூக்கில் தொங்கியதும்தான்.
மோடி தம்பட்டம்
இரண்டாவது காரணம், பணமதிப்பு இழப்பு. இதை பாஜக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இதனை இன்னும்கூட தங்களுக்கான ஒரு வெற்றியாக நினைத்து ஊர் ஊராக தம்பட்டம் அடித்து கொள்வதுதான் யாராலும் தாங்க முடியவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி இதனை மக்களிடம் அறிமுகப்படுதினார் மோடி.
பணமதிப்பு இழப்பு
ஆனால் நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா விவகாரத்தில் கருப்பு பண விவகாரம் சம்பந்தமாக மோடி அரசு நடந்துகொண்டதையும் இதே மக்கள்தான் கண்கூடாக பார்த்து உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போய்விட்டார்கள். பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என எதுவுமே எடுபடாமல் போனதும் தற்போதைய தோல்விக்கு அடுத்த காரணம்.
விவசாயிகளின் வருமானம்
மூன்றாவது காரணம், மோடி அளித்த தேர்தல் வாக்குறுதிகள். சென்ற மாதம் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்துக்கு பிரச்சாரம் செய்ய போன மோடி பேசும்போது, “அனைவருக்கும் குடிநீர் வழங்கிய பின்னரே ஓட்டு கேட்க வருவேன் என கூறிய சந்திரேசகர ராவ் தனது வாக்குறுதிகளை மறந்துவிட்டு இப்போது ஓட்டு கேட்க உங்கள் முன் வருகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவரை வீட்டுக்கு அனுப்புங்கள், வரும் 2020-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பாஜகவின் லட்சியம்” என்று சொல்லி விட்டு வந்தார்.
அள்ளி வீசினார்
எதை வேண்டுமானாலும் பிரச்சாரத்தின்போது அள்ளி வீசலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு மோடிதான். 2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் “என்னை பிரதமராக தேர்ந்தெடுத்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்” என்றார். ஆனால் இன்றுவரை வருமானம் இரட்டிப்பாக்கவில்லை. இதே வார்த்தையைதான் 2 மாசத்துக்கு முன்னாடியும், “2022 ம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் 2 மடங்காகும்” என்று மாற்றி பேசினார்.
ரூ.15 லட்சம்
ஆனால் தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்யும்பொழுது 2020 ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மறுபடியும் மாற்றி சொல்கிறார். மோடி வார்த்தையின் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போனதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது. அனைவருக்கும் 15 லட்சம் பேங்கில் போடுவேன் என்று சொன்னது தனி வயித்தெறிச்சல் சமாச்சாரம்.
காய் நகர்த்தினார்கள்
நான்காவது காரணம், இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மன, இன ரீதியான விவகாரங்களும் பெரும்பாலான ஓட்டுக்களை இழக்க காரணமாக இருந்திருக்கிறது. மாட்டுக்கறி விவகாரத்திலிருந்து சிறுபான்மையினர் மீதான அனைத்து வகை தாக்குதல்களையும் பாஜக தலைவர்கள் சரியாகவே காய் நகர்த்தி செய்து முடித்தார்கள். இதுவே அவர்களை இன்று தூக்கி அடித்திருக்கிறது.
பாஜக ஆட்டம் கண்டது
குறிப்பாக மிசோரத்தில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்தான். 87 சதவீதத்துக்கும் மேல் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அதனை பிரிக்க பாஜக சூழ்ச்சியில் இறங்கலாமா? கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரனை, மிசோரம் மாநில ஆளுநராக நியமித்து இன்னும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டதுதான் மிச்சம். அம்மாநில வரலாறு, மொழி, பாரம்பரியத்தை ஆர்எஸ்எஸ் அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இன்று பாஜக ஆட்டம் கண்டிருக்க மற்றொரு காரணம். இது மிசோரத்திற்கு மட்டும் பொருந்தாது, இந்துத்துவா சாராம்சத்தை விதைத்துவரும் எல்லா மாநிலங்களிலுமே இந்த நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது.
வீரியம் வெளிப்படும்
எனவே தற்போதைய 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக தோல்விக்கு இந்த 4 நான்கு காரணங்களும் அடிப்படையானது மட்டுமல்ல, அஸ்திவாரத்தையே அசைத்தும் பார்த்து விட்டது. இந்த 4 காரணங்களும் நாடு முழுவதும் பதவி சிதறி பொதுமக்களிடையே ஆட்கொண்டு கிடக்கிறது. இதன் வீரியத்தை அந்தந்த மாநில தேர்தல்களில் மக்கள் கண்டிப்பாக வெளிப்படுத்துவார்கள்.